தேனி மாவட்டம், குச்சனூரில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். இதில் 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
குச்சனூரில் கிழக்கு மற்றும் வடக்குத் தெருவைச் சேர்ந்த இரு தரப்பினர்களுக்கிடையே கடந்த 6 மாதத்திற்கு முன்பு விளம்பர பதாகை அவமதிப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை இரவு ஒரு தரப்பினர் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, மற்றொரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கும்பலாகச் சென்று, ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சித் (30), ராணுவ வீரர் முத்துசோனை (27) ஆகிய இருவரையும் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்த சின்னமனூர் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் காயமடைந்த ரஞ்சித் மற்றும் முத்துச்
சோனை ஆகிய இருவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக, மூர்த்தி (35), ராஜேந்திரன் (38), மாயகிருஷ்ணன் (36), ரெங்கராஜன் (22), முத்துக்கருப்பையா (26), ராம்குமார் (23), லட்சுமணப்பிரபு (23) ஆகிய 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.