அமமுக அலுவலகத்தில் ரூ.1.48 கோடி பறிமுதல் வழக்கு: வழக்குரைஞர் கைது
By DIN | Published On : 06th May 2019 12:59 AM | Last Updated : 06th May 2019 12:59 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் தொடர்புடைய வழக்குரைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அமமுக அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 16- ஆம் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.1.48 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
சோதனையின் போது கட்டடத்தில் நுழைந்த அமமுகவினரால் பிரச்னை ஏற்பட்டதால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் நான்கு முறை சுட்டனர். இதனையடுத்து கட்சியினர் சிதறி ஓடினர். அப்போது அங்கிருந்த அமமுகவினர் சிலர் பணக்கட்டுகளை எடுத்துக்கொண்டு ஓடியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி நடராஜரத்தினம் அளித்தப் புகாரின் பேரில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளில் 156 பேர் மீது ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய நாச்சியார்புரத்தை சேர்ந்த பழனி (54), ஆண்டிபட்டியை சேர்ந்த சுமன்ராஜ் (21), பிரகாஷ்ராஜ் (22), சிலோன் காலனியை சேர்ந்த மது (33) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 152 பேரை மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தில் தொடர்புடைய தேனியை சேர்ந்த வழக்குரைஞர் செல்வம் (35) என்பவர் போடியில் உள்ள ஒரு திரையரங்கில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் செல்வத்தை கைது செய்தனர். அவரை ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.