தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தக் கோரிக்கை

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நெல் விளைந்த விவசாய நிலங்களை அழித்து

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நெல் விளைந்த விவசாய நிலங்களை அழித்து கட்டடங்களாக மாற்றி வருவதால் விளைபொருள்களின் உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாற்றுப் பாசனம் மூலம் மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவுக்கு இரு போக நெற்பயிர் விவசாயமும், அதே போல ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் தோட்டம்  மற்றும் வேளாண் விவசாயப் பணிகளும் நடைபெற்றன. ஆனால், கடந்த  சில ஆண்டுகளாக உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் பெரும்பாலான விளை நிலங்கள்  திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பெட்ரோல் பங்குகளாக மாறி வருகின்றன.
 உணவுப் பொருள்கள் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: மாவட்டத்தில் விவசாயம் படிப்படியாக குறைந்து வருவதால் அதன் பரப்பளவும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால், விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தில் விவசாய உணவுப் பொருள்களின் உற்பத்தியும் குறைய வாய்ப்பு இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகள் மெத்தனப் போக்கை கைவிட்டு பாசன நிலங்கள் அழிவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:  திண்டுக்கல்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையானது  மாவட்டத்தில் முக்கியமான சின்னமனூர், உத்தமபாளையம், கூடலூர், பெரியகுளம், தேனி, வீரபாண்டி போன்ற பகுதிகள் வழியாக செல்கிறது. இதனால் பணம் சம்பாதிக்கும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ள ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் விளை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி  விடுகின்றனர். பின்னர், அதனை சில ஆண்டுகள் விவசாயமே செய்யாமல் தரிசு நிலம் எனக்கூறி சம்பந்தப்பட்ட  உள்ளாட்சி அமைப்புகளிடம் குறுக்கு வழியில் அனுமதி பெற்று பிளாட்டுகளாக மாற்றி லாபம் சம்பாதிக்கின்றனர். இது போன்ற காரணத்தினாலேயே பல விவசாயிகள் தங்களது  நிலத்தை இழந்து கேரளாவுக்கு தினக்கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  
 எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயப் பணிகள் செய்ய ஏதுவான  நிலங்களில் எந்தவிதமாக  கட்டுமானப்பணிகளும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல்  நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி விவசாய நிலங்களை காக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து  உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கூறும் போது, பேரூராட்சியிடம் அனுமதியில்லாமலேயே உத்தமபாளையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com