முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மேகமலை வன உயிரினக் கோட்டத்தில் 6 வனச் சரகர்கள் பணியிட மாற்றம்
By DIN | Published On : 15th May 2019 06:52 AM | Last Updated : 15th May 2019 06:52 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், மேகமலை வன உயிரினக் கோட்டத்திற்கு உள்பட்ட வனப் பகுதியில் தொடர்ந்து விதிமீறல்கள் நடந்து வருவதாக புகார் எழுந்ததையடுத்து அங்கு பணியாற்றி வரும் 6 வனச் சரகர்கள் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேகமலை வன உயிரினக் கோட்டத்தில் உள்ள கூடலூர், கம்பம் கிழக்கு, சின்னமனூர், மேகலை, வருஷநாடு, கண்டமனூர் வனச் சரகங்களுக்கு உள்பட்ட வனப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு, மரம் வெட்டிக் கடத்துவது, வன விலங்குகளை வேட்டையாடுதல், யானை மட்டும் வன விலங்குகள் இறப்பு, வனத்துறை கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில், மேகமலை வன உயிரின சரணாலயக் காப்பாளராகப் பணியாற்றி வந்த கலாநிதி 2 மாதங்களுக்கு முன்பு நாகபட்டினத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தற்போது கூடலூர் வனச் சரகர் அன்பழகன், கம்பம் கிழக்கு வனச் சரகர் தினேஷ், சின்னமனூர் வனச் சரகர் முருகன், மேகமலை வனச் சரகர் கணேசன், வருஷநாடு வனச் சரகர் இக்பால், கண்டமனூர் வனச் சரகர் குமரேசன் ஆகியோரை வெளி மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வனத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த இடங்களில் விரைவில் புதிய வனச் சரகர்கள் நியமிக்கப்படுவர் என்று மாவட்ட வனத் துறை அலுவலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.