ஆண்டிபட்டியில் மல்லிகைப் பூக்கள் விலை சரிவு: கிலோ ரூ.80 -க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை
By DIN | Published On : 16th May 2019 06:56 AM | Last Updated : 16th May 2019 06:56 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பூக்கள் சந்தையில் மல்லிகைப் பூக்கள் கிலோ ரூ.80 -க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பில் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் அனைத்தும் ஆண்டிபட்டியில் செயல்படும் பூக்கள் சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 800 கிலோ வரை பூக்கள் வரத்து இருக்கும். கடந்த வாரம் வரையில் ஒரு கிலோ மல்லிகைப் பூக்கள் ரூ.300 வரையில் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில் மல்லிகைப் பூக்களின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 3 டன் வரையிலான பூக்கள் வரத்து உள்ளது. அதிகமான வரத்து காரணமாக, இவற்றின் விலை கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.80- க்கு புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டது. இதன்காரணமாக, மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது கிடைக்கும் விலை, பூக்களை பறிக்கும் தொழிலாளர்களின் கூலி வழங்குவதற்கு கூட போதவில்லை என்றும், செடிகளுக்கு வாகனத்தில் கொண்டு வந்து தண்ணீர் பாய்ச்சி வருவதால் நட்டத்தை எதிர்கொள்ளும் நிலை உள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
எனவே, மல்லிகைப் பூக்களுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்து, தேனி மாவட்டத்தில், வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.