வாக்களித்ததை விடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது வழக்கு
By DIN | Published On : 16th May 2019 07:00 AM | Last Updated : 16th May 2019 07:00 AM | அ+அ அ- |

போடியில் தான் வாக்களித்ததை விடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
தேனி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட போடி சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடி எண் 55-ல் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் ஜெமிமா பிளாரன்ஸ் போர்ஜியா (49). இவர் பணியிலிருந்த போது, வாக்களிக்க வந்த போடியைச் சேர்ந்த அழகர்சாமி (47) என்பவர் வாக்களிக்கும் இயந்திரத்திற்கு அருகில் நின்று செல்லிடப்பேசியை இயக்கிக் கொண்டிருந்துள்ளார். இதை வாக்குச்சாவடி அலுவலர் கண்டித்தபோது, திடீரென அழைப்பு வந்து விட்டதாக கூறியதுடன், அலுவலரை ஒருமையில் அவமதித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில தினங்கள் கழித்து, அழகர்சாமி தான் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களித்ததை விடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனைக் கண்ட வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் ஜெமிமா பிளாரன்ஸ் போர்ஜியா போடி நகர் காவல் நிலையத்தில் புகார்
செய்தார்.
அதன் பேரில், அழகர்சாமி மீது தேர்தல் விதிகளை மீறியது, அவதூறாக பேசியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போடி நகர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.