சுடச்சுட

  

  மறு வாக்குப் பதிவு பணிக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் நியமனம்

  By DIN  |   Published on : 17th May 2019 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டத்தில் மறு வாக்குப் பதிவு நடைபெறும் இரு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு மற்றும் வாக்குச் சாவடி பணிக்கு வருவாய்த் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
   மாவட்டத்தில் பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வடுகபட்டி, சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளி, ஆண்டிபட்டி சட்டப் பேரவை தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், கம்மவார் சரஸ்வதி நடுநிலைப் பள்ளி ஆகிய வாக்குச் சாவடிகளில் மே 19ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  இந்த வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு மற்றும் வாக்குச் சாவடி பணிக்கு வருவாய்த் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 6 பேர் வீதம் மொத்தம் 12 வருவாய்த் துறை அலுவலர்கள் வாக்குப் பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
  மறு வாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளில் மே 19 ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர்கள் இடது கை நடுவிரலில் மை வைத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 
  வாக்குப் பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்குச் சாவடிகளில் இருந்து கொடுவிலார்பட்டியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்படும். அங்கு மறு வாக்குப் பதிவு நடைபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் என்று குறிப்பிட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். 
  இந்த வாக்குச் சாவடிகளில் ஏற்கனவே பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், எண்ணிக்கைக்கு தேவையற்றவை என்று குறிப்பிட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai