தேனியில் மறு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நீக்கப்படாத வேட்பாளர்கள் பெயர், சின்னம்: அரசியல் கட்சியினர் குழப்பம்

தேனியில் மறுவாக்குப் பதிவுக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்களை ஆய்வு செய்தபோது, ஏற்கெனவே

தேனியில் மறுவாக்குப் பதிவுக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரங்களை ஆய்வு செய்தபோது, ஏற்கெனவே பதிவான வேட்பாளர்களின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை காண்பித்ததால் அரசியல் கட்சி பிரதிநிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
  தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் மே 19-ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
இதற்குத் தேவையான 50 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடந்த மே 7-ஆம் தேதி இரவு கோவையில் இருந்து தேனிக்கு வந்து சேர்ந்தன. மேலும் 
20 வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 30 விவிபேட் இயந்திரங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
இந்த இயந்திரங்களை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில்  மாவட்ட ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர். 
அப்போது, வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாதிரிக்காக வேட்பாளர்கள் மற்றும் சின்னம்  பொருத்தப்பட்டிருந்த எண்களை அழுத்தி சோதனையிட்டதில், விவிபேட் இயந்திரத்தின் திரையில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் காட்சியளித்தது. 
இதனால், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் குழப்பம் அடைந்தனர்.
பின்னர், தேனி மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்த வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தியிருந்த விவிபேட் இயந்திரம், தற்போது தேனி மாவட்டத்திற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளதால், அதில் ஏற்கெனவே பொருத்தியிருந்த வேட்பாளர்கள் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் ஆகியவை காட்சியளிப்பதாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பராமரிப்பு பொறியாளர்கள் விளக்கம் அளித்தனர். 
இதையடுத்து விவிபேட் இயந்திரத்தில் பொருத்தியிருந்த வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை நீக்கப்பட்டு, மாதிரிக்காக எண்களை பொருத்தி கட்டுப்பாட்டு கருவியுடன் இணைத்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது.
இரு வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், தேவைக்கும் அதிகமான எண்ணிக்கையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குழப்பத்தையும், தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.வெங்கடேசன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com