முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
உள்ளாட்சித் தேர்தல்: தேனி மாவட்டத்தில் 1,576 வாக்குச் சாவடிகள் அமைப்பு
By DIN | Published On : 18th May 2019 06:55 AM | Last Updated : 18th May 2019 06:55 AM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 1576 வாக்குச் சாவடிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3,384 வார்டுகளுக்கு மொத்தம் 1,575 வாக்குச் சாவடிகள் அமைத்து வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரைவு வாக்குச் சாவடி பட்டியல் குறித்து கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கடந்த மே 14ஆம் தேதி வரை பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று, பெரியகுளம் நகராட்சியில் உள்ள ஒரு பொது வாக்குச் சாவடி, வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித் தனி வாக்குச் சாவடியாக பிரிக்கப்பட்டு, வரைவு வாக்குச் சாவடி பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு மொத்தம் 1,576 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்று மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறினர்.