வாக்கு எண்ணிக்கை பணிக்கு 336 அலுவலர்கள் நியமனம்
By DIN | Published On : 18th May 2019 06:58 AM | Last Updated : 18th May 2019 06:58 AM | அ+அ அ- |

தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் இடைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பணிக்கு மொத்தம் 336 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து அவர் பேசியது:
தேனி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவை தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில், தொகுதி வாரியாக தனித் தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முகவர்கள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு அளித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள், இடைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைக்கு தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கு தலா ஒரு மேற்பார்வை அலுவலர், உதவியாளர், நுண்பார்வையாளர் வீதம், 112 வாக்கு எண்ணிக்கைக்கு மொத்தம் 336 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவித்த பின்னரே அடுத்து சுற்று வாக்கு எண்ணிக்கையைத் தொடங்க வேண்டும் என்றார்.