ஆண்டிபட்டியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
By DIN | Published On : 23rd May 2019 06:45 AM | Last Updated : 23rd May 2019 06:45 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் சாலையோர கடைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேருந்து நிலைய பகுதிகளிலும், வைகை அணை சாலைப்பிரிவு, வேலப்பர் கோவில் சாலைப்பிரிவு ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் அதிகமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத நிலை உள்ளது. பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முன்பாக தற்காலிக கடைகளும், ஆட்டோக்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. ஏற்கெனவே குறுகலாக காணப்படும் சாலையில் தற்போது ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், ஆண்டிபட்டி வழியாக வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளும் நிலை உள்ளது. எனவே ஆண்டிபட்டி நகரில் போக்குவரத்து போலீஸாரை நியமிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து குறைந்த அளவு போலீஸார் மட்டும் போக்குவரத்து பணிக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால் போலீஸார் நியமிக்கபட்ட நிலையிலும் சாலையோர ஆக்கிரமிப்பின் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்பட்டு வருகிறது. மேலும் நகரில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிக்னல் விளக்குகள் பல ஆண்டுகளாக காட்சிப் பொருளாக காணப்படுகின்றன. எனவே நகரில் நாளுக்கு நாள் தொடரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையினை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.