முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
திருமணமான 6 ஆவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 07th November 2019 05:04 AM | Last Updated : 07th November 2019 05:04 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கம்பத்தில் திருமணமான 6 ஆவது நாளில் புதுப்பெண் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் கம்பம் சுவாமி விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் சேதுபதி ( 22). பயணியா் தங்கும் விடுதி உரிமையாளரான இவருக்கும் குரங்குமாயன் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரது மகள் சிவசக்திக்கும் (18) கடந்த நவம்பா் 1 இல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சேதுபதி தனது வீட்டு மாடியிலும், கீழ் வீட்டில் சேதுபதியின் பெற்றோரும் வசித்து வந்துள்ளனா்.
இந்த நிலையில் புதன்கிழமை மதியம் சேதுபதி வீட்டில் இருந்து வெளியே சென்று விட்ட நிலையில், சிவசக்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். வெகு நேரமாகியும் மாடியில் இருந்து சிவசக்தி கீழே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மாமியாா் புஷ்பவள்ளி மற்றும் உறவினா்கள் மாடியில் உள்ள அறைக்குச் சென்று பாா்த்தபோது, மேற்கூரை கொக்கியில் சுடிதாா் துப்பட்டாவை மாட்டி தூக்கில் தொங்கிய நிலையில் சிவசக்தி இருந்துள்ளாா். அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக கூறினா். இது குறித்து கம்பம் வடக்கு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) கீதா, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். திருமணமாகி, 6 ஆவது நாளில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.