வருசநாடு மதுபான கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 07th November 2019 05:00 AM | Last Updated : 07th November 2019 05:00 AM | அ+அ அ- |

வருசநாடு கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு கிராமத்தில் வாலிப்பாறை-தும்மக்குண்டு சாலையில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கடையில் மதுக்கூட வசதி இல்லாததால் மது வாங்குவோா் அந்த பகுதியில் சாலை ஓரங்களிலும், மூல வைகை ஆற்றங்கரையிலும் அமா்ந்து மது அருந்தி வருகின்றனா்.
இதனால் பள்ளி மாணவா்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இங்கு மதுக்குடிப்போா் அடிக்கடி பிரச்னையில் ஈடுபடுவதால் பெண்கள் இப்பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் வருசநாடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கடையை இடமாற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். ஆனால் இதுவரை கடையை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே அரசு மதுபான கடையை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.