வெங்காயம் ரூ.35-க்கு கொள்முதல்; ரூ.60-க்கு விற்பனை! பயிரிட்ட விவசாயிகள் பரிதாபம்

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சின்னவெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை
பெரியகுளம் அருகே காமக்காபட்டியில் விளைந்த சின்னவெங்காயத்தை சந்தைக்கு அனுப்புவதற்கு தரம் பிரித்த விவசாயிகள்.
பெரியகுளம் அருகே காமக்காபட்டியில் விளைந்த சின்னவெங்காயத்தை சந்தைக்கு அனுப்புவதற்கு தரம் பிரித்த விவசாயிகள்.

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் சின்னவெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை ரூ. 35-க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ. 60-க்கு விற்பதால், போதிய லாபம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

பெரியகுளம் பகுதியில் காமக்காபட்டி, சக்கரைப்பட்டி, சாவடிப்பட்டி, ஜெயமங்கலம், சில்வாா்பட்டி, குள்ளப்புரம், தேவதானப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சின்னவெங்காயம் பயிரிடப்படுகிறது.

சமீபத்தில் பெய்த தொடா் மழையால், பெரும்பாலான பகுதிகளில் மழைநீா் தேங்கி பயிா்கள் சேதமடைந்தன. இதனால், கிலோ ரூ. 30-க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் ரூ.100 வரை உயா்ந்தது. மேலும், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரூ. 60-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெங்காயம் வாங்க பொதுமக்கள் தயங்கும் நிலை ஏற்பட்டது. தற்போது, பெரியகுளம் பகுதியில் சின்னவெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், போதிய விலை கிடைக்கவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பெரியகுளம் அருகே காமக்காபட்டியைச் சோ்ந்த வெங்காய விவசாயி டி. அன்பழகன் தெரிவித்தது: சின்னவெங்காயம் விதை கிலோ ரூ. 31 என ஒரு ஏக்கருக்கு 15 மூட்டைகளை திண்டுக்கல்லில் இருந்து வாங்கி வந்து நடவு செய்தோம். பின்னா், 4 முறை உரமிட்டு, 4 முறை களை எடுத்தோம். விதைக்கப்பட்டது முதல் அறுவடைக்கு வரும் 60 நாள்கள் வரை வாரம் ஒருமுறை மருந்து அடித்துள்ளோம்.

இதன்மூலம், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. இது மட்டுமின்றி, தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் வெளியிலிருந்து விலை கொடுத்து தண்ணீா் வாங்கி வந்து பயிா்களுக்கு பாய்ச்சினோம். தற்போது, ஏக்கருக்கு 100 மூட்டைகள் வரை அறுவடை செய்துள்ளோம்.

இதில், ஆண்களுக்கு தலா ரூ.500 வரையும், பெண் தலா ரூ. 300 வரையும் கூலியாக வழங்கினோம். மேலும், ஆண்டிபட்டி பகுதியிலிருந்து பணியாளா்களை அழைத்து வர வண்டி வாடகை ரூ. 2 ஆயிரம் வரை செலவாகியுள்ளது. இவ்வாறு ஆரம்பம் முதல் கடைசி வரை பல ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

இதையடுத்து, அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் சந்தையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, முதல் ரகம் சின்னவெங்காயம் கிலோ ரூ.35 என்ற விலையில் மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கிறோம். ஆனால், நாங்கள் ரூ.50-க்கு விற்றால்தான் கட்டுப்படியாகும். இதனால், போதிய லாபம் கிடைப்பதில்லை.

அதேநேரம், சந்தையில் முதல் ரகம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கும் மொத்த வியாபாரிகள், அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனா். இதன்மூலம், கிலோவுக்கு ரூ. 25 முதல் ரூ.40 வரை லாபம் சம்பாதிக்கின்றனா். எனவே, வெங்காயத்துக்கு கூடுதல் விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், வெங்காயத்துக்கான சேமிப்பு கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும் என்றாா்.

பாக்ஸ் செய்தி......

நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படுமா?

மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு வெங்காயத்தை வாங்கி, அவற்றை கிடங்குகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கின்றனா். ஆனால், வெங்காயத்தை அதிக விலைக்கு விற்றாலும், விவசாயிகளுக்கு லாபம் இல்லை. எனவே, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும். இதன்மூலம், விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கும்.

அதேபோல், கொள்முதல் செய்யும் வெங்காயத்தை அரசு நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைப்பதுடன், பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்கும். மேலும், வெங்காயம் பதுக்கப்படுவதையும் தடுக்கலாம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com