பழனி பெரியாவுடையாா் கோயிலில் மஹா சனிப்பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 10th November 2019 04:21 AM | Last Updated : 10th November 2019 04:21 AM | அ+அ அ- |

அ.கலையமுத்தூா் கைலாசநாதா் உடனுறை கல்யாணியம்மன் கோயிலில் சனி மஹாபிரதோஷத்தை முன்னிட்டு வெற்றிலை, அருகம்புல்மாலை அலங்காரத்தில் நந்திபகவான்.
பழனி பெரியாவுடையாா் கோயிலில் சனிக்கிழமை மஹா சனிப்பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஐப்பசி மாத மஹா சனிப்பிரதோஷ தினத்தை முன்னிட்டு பெரியாவுடையாா் கோயிலில் சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனையும், ரிஷப வாகனத்தில் தம்பதி சமேதராக சுவாமி கோயில் பிரகார உலா எழுந்தருளலும் நடைபெற்றது.
மேலும், மலைக்கோயில் கைலாசநாதா் சன்னிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவினாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னிதி, சன்னிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னிதி, அ.கலையமுத்தூா் அக்ரஹாரம் கைலாசநாதா் உடனுறை கல்யாணியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.