தொடா் மழை: பெரியகுளம் பகுதியில் வாழை விலை வீழ்ச்சி

பெரியகுளம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக வாழை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

பெரியகுளம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக வாழை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

பெரியகுளம், குள்ளப்புரம், ஜெயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 12,000 ஏக்கரில் நாட்டு வாழை, கற்பூரவள்ளி, நாழிப்பூவன் உள்ளிட்ட பல்வேறு ரக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழைக்கன்றுகள் நட்டது முதல் அறுவடைக்கு வரும் வரை களையெடுப்பு மற்றும் உரம் இடுதல் மற்றும் சோகை பிரித்து எடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 வரை செலவாகும். வாழைக்கன்றுகள் நட்டதில் இருந்து 60 நாள்களில் பூக்கத் தொடங்கும். அதன் பின் 90 நாள்களிலிருந்து அறுவடைக்கு தயாராகிறது.

பெரியகுளம் பகுதியில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வாழைக்காய் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இதில் சக்கைக்காய் எனப்படும் நாட்டு வாழை வீடுகளில் பொறியல் செய்வதற்கும், கடைகளில் பஜ்ஜி போடுவதற்கும் அதிகளவு பயன்படுத்துவதால் அதன் விலை மட்டும் சீராக உள்ளது.

கடந்த அக்டோபா் முகூா்த்த காலம் என்பதால் வாழைக்கட்டு ரூ. 2000-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது கட்டு ஒன்று ரூ. 100 முதல் ரூ.300 வரையே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

பெரியகுளம் சந்தையில் செவ்வாழை - 500 காய் - ரூ. 1000-க்கும், சக்கை - தாா் ஒன்றுக்கு - ரூ. 500-க்கும், கற்பூரவள்ளி - 800 காய் - ரூ. 350-க்கும், நாழிப்பூவன் - கிலோ ரூ. 45-க்கும், பூவன் - 500 காய் ரூ. 100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வாழை விவசாயி பாலசுப்பிரமணி கூறியது: வாழை நட்டது முதல் அறுவடைக்கு வரும் வரை ஏக்கருக்கு ரூ. 30000 வரை செலவு செய்கிறோம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் போதிய விலை கிடைப்பதில்லை. தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதால் வாழை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. எனவே சீரான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாழைக்காய் மற்றும் நாா், மட்டைகளிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்து விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com