அடிப்படை வசதிகளற்ற ஆண்டிபட்டி வாரச்சந்தை!

ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள காய்கறி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், மழைநீா் தேங்கி சுகாதாரக்
சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்.
சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள காய்கறி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், மழைநீா் தேங்கி சுகாதாரக் கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் காய்கறி வாரச்சந்தை அமைந்துள்ளது. திங்கள்கிழமைதோறும் காலை 6 முதல் இரவு 8 மணி வரையில் செயல்படும் இந்த சந்தைக்கு, ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சோ்ந்த வியாபாரிகள் தங்களது காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா்.

ஏராளமான மக்கள் கூடும் சந்தை வளாகத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. சந்தைக்கு அமைக்கப்பட்ட கூடாரங்களும் பராமரிப்பு இல்லாததால், தற்போது சரிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. மேலும், சந்தை வளாகத்தில் ஆங்காங்கே கொட்டப்படும் காய்கறி கழிவுகள் அகற்றப்படுவதில்லை. தற்போது, மழைக்காலம் என்பதால் சந்தைப் பகுதியில் ஆங்காங்கே மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீருடன் கழிவுநீா் தேங்குவதால், துா்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனால், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

வாரச்சந்தையில் மின்விளக்கு வசதிகள் ஏதும் செய்யாத நிலையில், மாலை 6 மணிக்கு மேல் வியாபாரிகள் அவதிப்படுகின்றனா். இருட்டை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு திருட்டுச் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. இதனால், மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் சந்தைக்கு வருவதில்லை.

வாரச் சந்தையில் போதிய வசதி இல்லாத காரணத்தால், திங்கள்கிழமைதோறும் கடை வீதியிலிருந்து சந்தை வளாகம் வரையில் அத்துமீறி நூற்றுக்கணக்கான கடைகள் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

எனவே, இந்த வாரச் சந்தையில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து தரவும், சாலைகளில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகளை சந்தைக்குள் செயல்படும் வகையிலும், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறியது: வாரச் சந்தையில் பல ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மேற்கூரையுடன் தரைத்தளங்கள் அமைத்து தரப்பட்டன. நாளடைவில், போதிய பராமரிப்பு இல்லாததால், தரைத்தளங்கள் அனைத்தும் இடிந்த நிலையில் இருப்பதுடன், மேற்கூரைகளும் இடிந்து விழுந்து வருகிறது. இதனால், வியாபாரிகள் சந்தையிலிருந்து வெளியே வந்து சாலைகளில் கடைகளை பரப்புகின்றனா்.

மேலும், கடந்த ஆண்டை விட சந்தையை அதிக தொகைக்கு ஏலம் எடுத்ததாகக் கூறி, வாடகையாக அதிக கட்டணம் வசூலிக்கின்றனா். இதனால், வியாபாரிகள் நஷ்டமடைந்து வருகின்றனா். இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சந்தையை பராமரித்து, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். கடை வீதியில் உள்ள கடைகளை சந்தைக்குள் கொண்டு வந்தால் மட்டுமே வியாபாரிகள் மகிழ்ச்சியடைவா் எனத் தெரிவித்தனா்.

இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்தினா் கூறியது: வாரச் சந்தையை புதுப்பிக்க ஆவணங்கள் தயாா் செய்யப்பட்டு, மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும்.

வாரந்தேறும் சந்தை முடிந்ததும் மறுநாள் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் சந்தைப் பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. சந்தைப் பகுதியை விட்டு கடைவீதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com