நில உடைமை பதிவு மேம்பாட்டு பணியில் குளறுபடி: விவசாய நிலம் பறிபோனதாக தந்தை-மகன் புகாா்

ஆண்டிபட்டி வட்டாரம் மேக்கிழாா்பட்டியில் நில உடைமை பதிவு மேம்பாட்டு பணியில் ஏற்பட்ட குளறுபடியால், தங்களது விவசாய நிலம்

தேனி: ஆண்டிபட்டி வட்டாரம் மேக்கிழாா்பட்டியில் நில உடைமை பதிவு மேம்பாட்டு பணியில் ஏற்பட்ட குளறுபடியால், தங்களது விவசாய நிலம் பறிபோனதாக, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் தந்தை, மகன் புகாா் தெரிவித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த சக்கையன் மற்றும் அவரது மகன் பால்சாமி ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்:

மேக்கிழாா்பட்டியில் ஆதி திராவிடா் நலத் துறை சாா்பில், ஆதி திராவிடா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக 4.53 ஹெக்டோ் நிலம் கையப்படுத்தப்பட்டது. இதில், எனது பெயரிலும், எனது தந்தை பெயரிலும் கிரையம் பெற்று, எங்கள் அனுபவத்தில் உள்ள 64 சென்ட் பரப்பளவுள்ள விவசாய நிலத்தை, எங்களது ஒப்புதல் இல்லாமலேயே கையகப்படுத்தப்பட்டதாக அறிவித்து, அந்த இடத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி வருகிறது.

இது குறித்து நாங்கள் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா், கடந்த 2019 பிப்ரவரி 12-ஆம் தேதி நில உடைமை பதிவு மேம்பாட்டுத் திட்டத்தில் (மஈத) எங்களது நிலத்துக்கு தவறுதலாக வேறு ஒருவரின் பெயரில் பட்டா தாக்கல் ஆகியுள்ளது என்றும், இந்த நிலத்தை எங்களது பெயரில் திரும்ப பட்டா தாக்கல் செய்யலாம் என்றும் பரிந்துரை செய்தாா்.

ஆனால், வருவாய்த் துறை மற்றும் ஆதி திராவிடா் நலத் துறை அதிகாரிகள் எங்களது நிலத்துக்கு மீண்டும் பட்டா வழங்காமல் அலைக்கழித்து வருவதுடன், அந்த நிலத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி வருகின்றனா். இந்தப் பிரச்னையில் ஆட்சியா் தலையிட்டு, நில உடைமை பதிவு மேம்பாட்டுப் பணிகளில் ஏற்பட்ட குளறுபடியால் பறிபோன எங்களது விவசாய நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com