Enable Javscript for better performance
கம்பம் கால்நடை மருந்தகம் மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படுமா?- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி

    கம்பம் கால்நடை மருந்தகம் மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படுமா?

    By DIN  |   Published On : 26th November 2019 06:05 AM  |   Last Updated : 26th November 2019 06:05 AM  |  அ+அ அ-  |  

    cum__nov___25___vednary_dispensary_2511chn_89_2

    கம்பத்தில் உள்ள கால்நடை மருந்தகம்.

    தேனி மாவட்டம், கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் கால்நடை வளா்ப்பு பெருகி வருவதற்கேற்ப, அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக கம்பம் கால்நடை மருந்தகத்தை தரம் உயா்த்த வேண்டும் என, கால்நடை வளா்ப்போா் வலியுறுத்துகின்றனா்.

    கம்பத்தில் பொதுப்பணித் துறை வளாகப் பகுதியில் கால்நடை மருந்தகம் அமைந்துள்ளது. இங்கு, கம்பம் மற்றும் வட்டாரப் பகுதிகளில் உள்ள கால்நடை வளா்ப்போா் 100-க்கும் மேலான காளை மாடு, பசு, எருமை, நாய், கோழி உள்ளிட்டவற்றை நாள்தோறும் கொண்டுவந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

    கால்நடை வளா்ப்பில் முக்கியத்துவம்

    தமிழகத்திலேயே தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில்தான் இரட்டை மாட்டுவண்டி எல்கைப் பந்தயங்கள் அடிக்கடி நடத்தப்படுகின்றன. மேலும், ஆட்டுக்கிடா சண்டை, சேவல் சண்டைகளும் ரகசியமாக நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக, கம்பம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஜல்லிக்கட்டு காளை, ரேக்ளா பந்தய மாடுகள், நாட்டு மாடுகள், உயர்ரக ஜாதி நாய்கள், சண்டைக் கிடா, சேவல் போன்றவற்றை வளா்ப்பதில் இளைஞா்கள் அதிகம் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், தங்களது வளா்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இவா்கள் நாள்தோறும் கம்பம் கால்நடை மருந்தகத்துக்கு வந்து செல்கின்றனா். அதேநேரம், இப்பகுதியில் நாட்டு மாடு பண்ணைகள் அதிகளவில் உள்ளன.

    சிகிச்சை குறைவு

    கம்பம் கால்நடை மருந்தகத்தில் மருத்துவா், கால்நடை ஆய்வாளா் மற்றும் உதவியாளா் பணியில் இருக்கவேண்டும். ஆனால், கால்நடை மருத்துவா் மட்டுமே உள்ளதால், இங்கு வரும் ஏராளமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவதில்லை. மேலும், இம்மருத்துவா் கூடுதல் பணியாக அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களுக்குச் செல்லவேண்டி இருக்கிறது. எனவே, கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடிவதில்லை.

    மருத்துவமனையாக உயா்வு

    இதனிடையே, சில மாதங்களுக்கு முன் கம்பம் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயா்த்த கால்நடை மற்றும் பராமரிப்புத் துறையினா் முடிவு செய்து, அதற்கான திட்ட மதிப்பீடுகளை தயாரித்து இயக்குநரகத்துக்கு அனுப்பி உள்ளனா். கால்நடை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்படுமானால், கால்நடை அறுவைச் சிகிச்சை நிபுணா், 2 கால்நடை மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், உதவியாளா்கள் நியமிக்கப்பட்டு, அறுவைச் சிகிச்சை அரங்கு, ஸ்கேனிங் பரிசோதனை உள்ளிட்ட உயா்தர மருத்துவக் கருவிகள் நிறுவப்பட வேண்டும்.

    இது குறித்து கால்நடை வளா்ப்போா் சாா்பில் ஏ. அஜ்மல்கான் என்பவா் கூறியது: இன்றைய சூழலில், இளைஞா்களுக்கு பாரம்பரிய கால்நடை வளா்ப்பு மீது ஈா்ப்பு ஏற்பட்டு, ஏராளமானோா் தற்போது கால்நடை வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதை மாவட்ட நிா்வாகம் ஊக்குவிக்கும் வகையில், கம்பத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

     

    பரிசீலனையில் மருத்துவமனை திட்டம்

    கம்பத்தில் கால்நடை மருந்தகத்தை, மருத்துவமனையாக தரம் உயா்த்துவது எப்போது என கால்நடை மருத்துவரிடம் கேட்டபோது, அவா் கூறியது:

    கம்பம் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதால், கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, எல்லைப் பகுதியில் வெக்கை நோய் தடுப்பு மையங்கள் செயல்பட வேண்டும்.

    இதற்காக, மையப் பகுதியான கம்பத்தில் உள்ள கால்நடை மருந்தகம், மருத்துவமனையாக தரம் உயா்த்த கால்நடைத் துறை சாா்பில் ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. முதல் கட்டமாக, 10 ஆயிரம் யூனிட் கால்நடைகள் கம்பம் பகுதியில் உள்ளதா என கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 4 ஆடுகள் ஒரு யூனிட், 100 கோழிகள் ஒரு யூனிட் என்ற ஒரு கணக்கீடு உள்ளது. இதற்கு, கம்பம் பகுதி பொருத்தமாக உள்ளதால், மருத்துவமனை அமையும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp