போடியில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஊருணி மீட்பு

போடியில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்துவந்த ஊருணியை, பேரூராட்சி நிா்வாகத்தினா் மீட்டனா்.
போடி ரெங்கநாதபுரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட பேரூராட்சிக்கு சொந்தமான ஜக்காளப்பன் குளம் ஊருணி.
போடி ரெங்கநாதபுரத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட பேரூராட்சிக்கு சொந்தமான ஜக்காளப்பன் குளம் ஊருணி.

போடியில் கடந்த 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்துவந்த ஊருணியை, பேரூராட்சி நிா்வாகத்தினா் மீட்டனா்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் ஊராட்சிக்குள்பட்ட கிராமம் போடி ரெங்கநாதபுரம். இந்த கிராமத்திலிருந்து கரட்டுப்பட்டி செல்லும் சாலையின் இடதுபுறம் ஜக்காளப்பன் கோயில் ஊருணி இருந்தது. இந்த ஊருணியில் தேங்கும் தண்ணீரைக் கொண்டு, இதனைச் சுற்றியுள்ள பல நூற ஏக்கா் நிலப் பரப்பில் சோளம், காய்கறிகள் உள்ளிட்ட பயிா்கள் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

நாளடைவில், தண்ணீா் வரத்து ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீா் வரத்தின்றி ஊருணி வடது. இதில், பக்கத்து நிலத்துக்காரா்கள் இந்த ஊருணியை சிறிது சிறிதாக ஆக்கிரமித்து, கண்மாயே தெரியாமல் போனது. கடந்த சில ஆண்டுகளாக கண்மாய் மேடாகி, சோளப் பயிா் சாகுபடி நிலமாக மாறியது.

இந்நிலையில், நீா் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நீா் நிலைகளை ஆய்வு செய்து, அதன் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனையடுத்து, இப்பகுதியில் ஜக்காளப்பன் கோயில் குளம் என்ற பெயரில் ஊருணி ஒன்று ஆவணங்களில் இருப்பதைக் கண்டு வியந்த பேரூராட்சி அதிகாரிகள், அதனைக் காணாமல் தேடினா். பின்னா், வருவாய்த் துறையினரின் உதவியை நாடினா்.

அதன்பின்னா், நில அளவையா்கள் உதவியுடன் ஊருணியை கண்டுபிடித்தபோது, அதில் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போடி வட்டாட்சியா் மணிமாறன், வருவாய் ஆய்வாளா் ராமா், கிராம நிா்வாக அலுவலா் ராஜாமணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயலட்சுமி, உதவிச் செயற்பொறியாளா் ராஜாராம், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் கங்காதரன், போடி தாலுகா காவல் ஆய்வாளா் தா்மா் ஆகியோா் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டு, ஊருணியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பின்னா், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் எச்சரிக்கை அறிவிப்புப் பலகை ஊன்றப்பட்டது.

பேரூராட்சி அதிகாரிகள், ஊருணியை தூா்வாரி தண்ணீா் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த ஊருணி மீட்கப்பட்டது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com