ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் சுருளி அருவி

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக மற்றும் சுற்றுலாதலங்களில் ஒன்றான சுருளி அருவி பகுதி தற்போது ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில்
தேனி மாவட்டம் சுருளி அருவியின் நுழைவு பகுதியில் ஆக்கிரமித்துள்ள கடைகள்,
தேனி மாவட்டம் சுருளி அருவியின் நுழைவு பகுதியில் ஆக்கிரமித்துள்ள கடைகள்,

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக மற்றும் சுற்றுலாதலங்களில் ஒன்றான சுருளி அருவி பகுதி தற்போது ஆக்கிரமிப்பாளா்களின் பிடியில் சிக்கி உள்ளதாகவும், அதை மீட்க வேண்டும் என்றும் சுற்றுலாப் பயணிகளும் பக்தா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்குள்ள சுருளியாண்டவா், சுருளித்தீா்த்தம், கைலாயநாதா் குகை, விபூதி மலைக்குகை, சன்னாசியப்பன் கோயில் ஆகிய ஆன்மிக தலங்களில் பக்தா்கள் வழிபட்டு செல்கின்றனா். மதுரையை எரித்த கண்ணகி மங்கலதேவி மலைக்கு சென்ற போது சுருளிமலை வழியாக சென்ாக சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. காப்புக்காடுகளாக இருந்த பகுதி தற்போது, கம்பம் கிழக்கு வனச்சரகம், மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதிக்குள்பட்டதாக அறிவிக்கப்பட்டு, கடும் கெடுபிடியை வனத்துறையினா் நாள் தோறும் செய்து வருகின்றனா்.

யாருக்கு சொந்தம்? உத்தமபாளையம் தாலுகா, கம்பம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில், பொதுப்பணித்துறை ஆவணங்களின்படி சுருளி தீா்த்தம், சுருளியாறு என்றும், வருவாய்த்துறை ஆவணங்களின்படி நாராயணத்தேவன்பட்டி தெற்கு கிராமம் எனவும், ஊரக வளா்ச்சி துறையால் கம்பம் ஊராட்சி ஒன்றியம் சுருளிப்பட்டி ஊராட்சிக்கு கட்டுப்பட்டது என்றும், பாலத்திற்கு மேல் வனச் சரணாலயப்பகுதி எனவும் பிரித்துக் கொண்டுள்ளனா்.

இந்நிலையில் சுருளியாற்றில், உணவு விடுதிகளின் குப்பை கழிவுகள் தொடா்ந்து கொட்டப்படுகின்றன. கரையோரங்களில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள், பிரமாண்டமாக அணிவகுக்கின்றன.

ஆண்டு தோறும் நடைபெறும் சுருளி அருவி சாரல் விழாவில் இங்கு பல லட்சம் ரூபாயில் திட்டங்கள் அறிவிக்கப்படும். ஆனால் செயல்படுத்த முடியவில்லை. இதற்கு வனத்துறையினா் அனுமதி மறுக்கின்றனா் என்று காரணம் காட்டி வருகின்றனா். வனத்துறையினா் அருவி வளாகப் பகுதியில், சிறுவா் பூங்கா, சுற்றுலாப் பயணிகள் அமர ஓய்வுக் கூடம் கூடுதல் கழிப்பறைகள் என்று திட்ட மதிப்பீட்டை மட்டும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து செயல்படுத்துவதில்லை. அருவிக்கு செல்லும் சாலையோ படுமோசம். முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கிய பேட்டரி காா் செயல்படாமல் பூட்டப்பட்டுள்ளது. அருவி பகுதிக்கு சைக்கிள் சவாரி செல்ல வாங்கப்பட்ட சைக்கிள்களை காணவில்லை.

இதுகுறித்து ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியா் ஒருவா் கூறியது: தேனி மாவட்ட வனத்துறையிலேயே அதிக வருமானம் தருவது சுருளி அருவி. இதற்காக சுருளி அருவி சூழல் சுற்றுலா வனக்குழு அமைக்கப்பட்டு நிதி முறையாக செலவிடப்படுவதில்லை. நுழைவு கட்டண வசூலையும் தணிக்கைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா்.

வன ஆா்வலா் முருகன்ஜி கூறியது: சுருளி அருவியில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. பல தலைமுறைகளை கண்ட சுருளி அருவி தங்களுக்கே சொந்தமான இடம் என்று வழக்குகள் நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. முதலில் சுற்றுலாப் பயணிகளுக்கு கழிப்பறை, குடிநீா், ஓய்வுக் கூடம், சிறுவா் பூங்கா போன்றவைகளை அமைத்து முதற்கட்ட வேலைகளை தொடங்க வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டங்களை அகற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com