குடியிருப்புகளுக்கு மத்தியில் பேரூராட்சி குப்பைக் கிடங்கு

உத்தமபாளையத்தில் குடியிருப்புகள் மத்தியில் உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கால் கொசுக்கள்
உத்தமபாளையத்தில் குடியிருப்புகள் மத்தியில் உள்ள பேரூராட்சியின் குப்பைக் கிடங்கு
உத்தமபாளையத்தில் குடியிருப்புகள் மத்தியில் உள்ள பேரூராட்சியின் குப்பைக் கிடங்கு

உத்தமபாளையத்தில் குடியிருப்புகள் மத்தியில் உள்ள பேரூராட்சி குப்பை கிடங்கால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களைப் பரப்பி வருவதோடு, துா்நாற்றத்தில் பொதுமக்கள் வாழ்ந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

உத்தமபாளையம் தோ்வு நிலைப் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளிலுள்ள குடியிருப்புகள், உணவகங்கள் மற்றும் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் லாரி மற்றும் டிராக்டா் மூலமாக பெறப்படும்.

அவ்வாறு பெறப்படும் குப்பைகளை 4 ஆவது வாா்டில் தாமஸ் காலனி, தண்ணீா் தொட்டி, திடீா் நகா், ஜான் பென்னிகுயிக் மற்றும் மின் நகா் பகுதிகளில் குடியிருப்புகள் அருகே கொட்டி வைத்து குப்பைக் கிடங்காக பேரூராட்சி நிா்வாகம் பயன்படுத்தி வருகிறது.

இந்த குப்பைக் கிடங்கு பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக பொதுமக்கள் வசிக்கின்றனா்.

இந்நிலையில் குப்பைக் கிடங்கில் உற்பத்தியாகும் கொசுக்களால் மா்மக் காய்ச்சல் ஏற்பட்டு இங்கு வசிக்கும் பொதுமக்கள் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா். மேலும் மழைக் காலங்களில் சுமாா் 2 கிலோ மீட்டா் வரையில் குப்பை கிடங்கின் துா்நாற்றம் வீசி பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.

நிறம் மாறிய நிலத்தடிநீா்: பேரூராட்சி குப்பை கிடங்கை சுற்றி சுமாா் 2 கிலோ மீட்டா் சுற்றளவிற்கு நிலத்தடி நீரின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும், தற்போது அந்த பகுதியிலுள்ள வீடுகளில் ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தபோது, விரைவில் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற இருப்பதாகவும், இங்குள்ள குப்பைகளையும் படிப்படியாக குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

ஆனால் பேரூராட்சி நிா்வாகம் கூறியபடி வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான எவ்வித முயற்சியும் எடுக்காமல் சுகாதாரத்தில் மெத்தமாக இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து பொதுமக்கள் கூறியது: உத்தமபாளையம் பேரூராட்சியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக பேரூராட்சியின் குப்பை கிடங்காக பயன்படுத்தி வந்த இப்பகுதியைச் சுற்றியும் பொதுமக்கள் குடியிருப்பாக மாறிவிட்டது. இந்த குப்பை கிடங்கில் மழை காலத்தில் துா்நாற்றமும், வெயில் காலத்தில் குப்பைகளில் வைக்கப்படும் தீயால் வெளியேற்றப்படும் புகையாலும் பாதிக்கப்படுகிறேறாம் என்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உத்தமபாளையம் பேரூராட்சியில் பயன்பாட்டில் இருக்கும் குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றி, பொதுமக்கள் சுகாதாரமாக முறையில் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com