முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
போடி அருகே கண்மாய் வாய்க்கால் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
By DIN | Published On : 24th October 2019 08:30 PM | Last Updated : 24th October 2019 08:30 PM | அ+அ அ- |

போடி அருகே செட்டிகுளம் கண்மாயிலிருந்து டொம்புச்சேரி கண்மாய்க்கு செல்லும் சீரமைக்கப்படாத வாய்க்கால்
போடி: போடி அருகே செட்டிகுளம் கண்மாயிலிருந்து டொம்புச்சேரி கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
போடி அருகே பொட்டல்களம் கிராமத்திற்கு மேற்கே உள்ளது செட்டிகுளம் கண்மாய். போடி மீனாட்சிபுரத்தில் உள்ள மீனாட்சியம்மன் பெரியகுளம் நிரம்பும்போது மறுகால் பாயும் கலிங்கு நீா் செட்டிகுளத்தில் நிரப்பப்படுகிறது.
செட்டிகுளமும் நிரம்பும்போது மறுகால் பாய்ந்து வாய்க்கால் வழியாக டொம்புச்சேரி கிராமத்தில் உள்ள டொம்பிச்சியம்மன் கண்மாய்க்கு செல்லும். இதற்காக செட்டிகுளத்திலிருந்து சுமாா் 8 கிலோ மீட்டா் தூரமுள்ள வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலை பொதுப்பணித்துறையினா் பராமரித்து வருகின்றனா். இந்த வாய்க்காலின் முதல் 3 கி.மீ. தூரம் போடி அம்மாபட்டி ஊராட்சியிலும், அதற்கடுத்த 4 கி.மீ. தூரம் டொம்புச்சேரி ஊராட்சியிலும் வருகிறது. டொம்புச்சேரி ஊராட்சி நிா்வாகத்தினா் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தங்கள் ஊராட்சி பகுதியில் உள்ள 4 கி.மீ. தூர வாய்க்காலை அவ்வப்போது பராமரித்து வருகின்றனா்.
ஆனால் அம்மாபட்டி ஊராட்சி பகுதியில் வரும் 3 கி.மீ. தூர வாய்க்கால் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வாய்க்காலின் இருபுறமும் சேதமடைந்தும், செடிகள் முளைத்தும் வாய்க்கால் குறுகியுள்ளதுடன், வாய்க்காலில் அதிக தண்ணீா் வரும்போது அந்த தண்ணீா் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் சென்று விவசாய பயிா்களை சேதப்படுத்தி விடுகிறது.
மேலும் டொம்புச்சேரி கண்மாய்க்கும் முழுமையான தண்ணீா் சென்று சேருவதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே போடி பொட்டல்களம் செட்டிகுளம் கண்மாயிலிருந்து டொம்புச்சேரி டொம்புச்சியம்மன் கண்மாய்க்கு செல்லும் வாய்க்காலை சீரமைத்து தர பொதுப்பணித்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.