சுடச்சுட

  

  பெரியகுளம் பகுதியில் புத்துயிர் பெறும் மண்பாண்டத் தொழில்: குளத்து மண் வழங்க அரசிடம் கோரிக்கை

  By நமது நிருபர்  |   Published on : 12th September 2019 07:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  themi

  நெகிழிப்பொருள்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளதால் பெரியகுளம் பகுதியில்  மண்பாண்டங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 
  தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் டி.கள்ளிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500-க்கு மேற்பட்டோர் மண்பாண்டம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நெகிழி பயயன்பாடு, குளத்து மண் எடுக்க கட்டுப்பாடு விறகு விலை உயர்வு ஆகியவற்றால் மண்பாண்டத் தொழில் 
  நலிவடைந்து இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு நெகிழிப் பொருள்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல் தடை விதித்ததால் நெகிழி பொருள்கள் பயன்பாடு குறைந்து மக்கள் மண்பாண்டங்களை உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் பெரிய குளம் பகுதியில் மண்பாண்டத் தொழில் புத்துயிர் பெற்றுள்ளது. 
  பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர் அண்ணாத்துரை தெரிவித்தது:  மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்தததால் எங்கள் பகுதியில் 30 பேர் மட்டுமே இத்தொழில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பூந்தொட்டி வைப்பதற்கு மண் தொட்டிகளை பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர். மேலும் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதால் கோடை காலத்தில் தண்ணீர் பானைகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இதே போன்று கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றுவதற்கு மண்ணால் செய்யப்பட்ட விளக்கு சட்டிகளின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் அவற்றை  அதிக அளவில் உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  
  பெரியகுளம் பகுதியில் இருந்து கேரள மாநிலத்துக்கும் மற்றும் திருச்சி போன்ற பகுதிகளில் இருந்தும் அதிகளவு மண்பாண்டங்களை வாங்குவதற்கு இங்கு வருகின்றனர். இதனால் முன்பைவிட கூடுதல் வருமானம் கிடைக்கிறது. அரசு இத்தொழில் மேலும் விரிவடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  குளத்து மண்ணை அரசே வழங்க வேண்டும்: மண்பாண்டம் செய்வதற்கு முக்கிய மூலப்பொருள் குளத்து மண் ஆகும். குளத்தில் இருந்து தரமான களிமண் எடுத்து பக்குவப்படுத்தி பானைகள் செய்யப்படுகின்றன. தற்போது குளத்து மண் எடுக்க அரசிடம் அனுமதி பெறுவதற்கு 15 நாள்கள் வரை ஆகிறது. அதன் பின் மண் எடுக்க சென்றால் அதிகாரிகள் பல்வேறு இடையூறுகள் செய்கின்றனர். எனவே மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட அளவு வண்டல் மண்ணை வீடுகளுக்கே வந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பானையை சுட்டு பதப்படுத்துவதற்கு முக்கிய பொருளான விறகு விலையும் அதிகரித்து உள்ளது. இதனால் போதிய லாபம் கிடைப்பதில்லை. அரசு சீமைக்கருவேல மரங்களை மண்பாண்டத்தொழிலாளர்கள் வெட்ட  அனுமதியளிக்க வேண்டும். இதன் மூலம் சீமைக்கருவேல மரங்கள் அழிவதோடு எங்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளும் கிடைக்கும் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai