சுடச்சுட

  

  கம்பத்தில் வாழைப்பழம் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.1.50 கோடி மோசடி: மேலாளர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 13th September 2019 08:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், கம்பத்தில் வெளிநாடுகளுக்கு  வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 46 லட்சத்து 44 ஆயிரத்தை மோசடி செய்துவிட்டதாக, அதன் மேலாளர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
        கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மல்லையன் மகன் மகேந்திரன் (59). இவர் மற்றும் இவரது அண்ணன் மனைவி ஹேமலதா, கார்த்திகேயன் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து வெளிநாடுகளுக்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். 
       இந்நிறுவனத்தில், முத்தலாபுரம் பிள்ளையார் கோயிலைச் சேர்ந்த பாண்டியன் மகன் மாரிச்சாமி என்ற பிரவீண் (30) வியாபார மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். 
       விவசாயிகளிடமிருந்து வாழைப்பழம் கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கொள்முதல் செய்யப்பட்ட வாழைப்பழங்களுக்கான ரூ. 88 லட்சத்து 22 ஆயிரம் தொகையை நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பிரவீண், அதை விவசாயிகளிடம் வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. பின்னர் இவர், மொத்தம் ரூ. 88 லட்சத்து 22 ஆயிரத்தை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்காக, நிறுவனத்திடம் 9 புரோ நோட்டுகள் எழுதிக் கொடுத்துள்ளார்.
       இந்நிலையில், கடந்த 20.7.2017 ஆம் தேதி பிரவீணிடம் பணம் கேட்ட மகேந்திரனை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளிவிட்டு கொலை மிரட்டலும் விடுத்தாராம். மேலும், ரூ. 58 லட்சத்து 22 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் கையாடல் செய்துவிட்டாராம்.
       இது குறித்து மகேந்திரன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அங்கிருந்து உத்தமபாளையம் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், கம்பம் வடக்குக் காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, சார்பு-ஆய்வாளர் எம். வினோத்ராஜா ஆகியோர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, பிரவீணை தேடி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai