தேனி அருகே பாதை வசதி கோரி 4-ஆவது நாளாக போராட்டம்: பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பதற்றம்

தேனி அருகே பாதை வசதி கோரி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

தேனி அருகே பாதை வசதி கோரி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், சாலை மறியலில் ஈடுபடுவதற்கு ஊர்வலமாகச் சென்றதால் பதற்றம் ஏற்பட்டது.
       தேனி அருகே ஊஞ்சாம்பட்டி இந்திரா காலனியில் ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள், தேனி-பெரியகுளம் சாலையிலிருந்து இந்திரா காலனிக்கு சென்று வர தனியாருக்குச் சொந்தமான இடத்தை பாதையாகப் பயன்படுத்தி வந்தனர். 
      தற்போது, இட உரிமையாளர் பாதையை மறித்து சுவர் எழுப்பிவிட்டதால், தங்களது குடியிருப்புப் பகுதிக்குச் சென்று வரமுடியவில்லை எனக் கூறி, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் இந்திரா காலனியை சேர்ந்த பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி, அதே பகுதியில் உள்ள தனியார் புளியந்தோப்பில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளின் சமரசப் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து, மாற்றுப் பாதை உருவாக்கித் தரக் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
     போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபடுவதற்காக ஊஞ்சாம்பட்டியிலிருந்து ரத்தினம் நகர் வழியாக தேனி-பெரியகுளம் சாலையை நோக்கி ஊர்வலமாகச் சென்றதால், பதற்றம் நிலவியது. ரத்தினம் நகர் பகுதியில் தேனி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான போலீஸார், ஊர்வலத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்திப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, அவர்கள் மீண்டும் ஊஞ்சாம்பட்டியில் உள்ள தனியார் புளியந்தோப்புக்குச் சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.      அங்கு அவர்களுடன், தேனி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பிரதீபா பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், தாங்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பாதையை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மனு: இந்நிலையில், ஊஞ்சாம்பட்டி இந்திரா காலனி மக்கள் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த தனியார் பாதையை கையகப்படுத்தி, தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க தாலுகா செயலர் டீ. வீரையா மற்றும் இந்திரா காலனி மக்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் மனு அளித்தனர்.
      அப்போது, ஊஞ்சாம்பட்டி இந்திரா காலனிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தருவதற்காக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் உரிய தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com