வருசநாடு அருகே கிராம மக்கள் சாலை அமைக்க முயன்றதால் பரபரப்பு

வருசநாடு அருகே சேதமடைந்துள்ள தார் சாலையை சீரமைக்க வனத் துறையினர் தடை செய்து வருவதாகவும்,

வருசநாடு அருகே சேதமடைந்துள்ள தார் சாலையை சீரமைக்க வனத் துறையினர் தடை செய்து வருவதாகவும், அப்பணிகளை தாங்களே செய்யப்போவதாகவும் கூறி, கிராம மக்கள்  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
       தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியத்தில் வாலிப்பாறை, தும்மக்குண்டு, காந்திகிராமம், முறுக்கோடை, அண்ணா நகர், சீலமுத்தையாபுரம், காமராஜபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
     இப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்காக, வருசநாடு, கடமலைக்குண்டு நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள மாணவ, மாணவியர் மேல் படிப்புக்காக தேனி மற்றும் ஆண்டிபட்டிக்கு வந்து செல்கின்றனர்.     இந்நிலையில், இக்கிராமங்களுக்கு வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு பல ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக சேதமடைந்து காணப்பட்டது. 
     எனவே, பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து, 3 மாதங்களுக்கு முன் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 2.4 கிலோ மீட்டர் தொலைவிலான சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறி, அப்பகுதியில் சாலை அமைக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் வாகனங்களை ஓட்டிச் செல்ல ஓட்டுநர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 
     இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் மொட்டப்பாறை என்ற இடத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலையை சீரமைக்கப் போவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வருசநாடு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் ராமபாண்டியன் தலைமையிலான  போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், வனத் துறையினர் வரும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.       அதையடுத்து, கண்டமனூர் வனச்சரகர் (பொறுப்பு) ஆறுமுகம் தலைமையில் வனத் துறையினர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், 15 நாள்களுக்குள் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com