Enable Javscript for better performance
கம்பம் கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

  

  கம்பம் கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் கோரிக்கை

  By DIN  |   Published on : 21st September 2019 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உற்பத்தியாகும் கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்க, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேகமலை வன உயிரினக் காப்பாளர் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலர் ச. கந்தசாமி, வேளாண்மை இணை இயக்குநர் ஜவஹரிபாய், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பேசியதாவது: நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆண்டுக்கு மும்முறை திராட்சை அறுவடை நடைபெறுகிறது. 
  ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சந்தைக்கு கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து திராட்சை வரத்து இல்லாத நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு கருப்பு பன்னீர் திராட்சை மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
  எனவே, 70 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரிய கருப்பு பன்னீர் திராட்சைக்கு புவிசார் குறியீடு வழங்க மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய
  வேண்டும்.
  தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண இழப்பீட்டுத் தொகையை வேளாண்மைத் துறை காலதாமதமின்றி வழங்க வேண்டும். முல்லைப் பெரியாற்றில் இருந்து பி.டி.ராஜன், தந்தை பெரியார் கால்வாய்களில் தண்ணீர் திறக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
  தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் உரிமம் பெறாமல் மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி அல்லிநகரம் நகராட்சி வாரச் சந்தைக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் வேளாண்மை விளைபொருள்களுக்கு நகராட்சி நிர்வாக குத்தகைதாரர் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை செய்யவேண்டும். மின் வாரியம் சார்பில் மின்நுகர்வோருக்கு முன்னறிவிப்பின்றி விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வைப்புத் தொகை மற்றும் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும். 
  மத்திய-மாநில நெடுஞ்சாலைகளில் தொழு உரம், வைக்கோல் மற்றும் வேளாண்மை விளைபொருள்களை ஏற்றிச்செல்லும் டிராக்டர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிப்பதை தடுக்கவேண்டும் என்றனர்.
  இதற்கு ஆட்சியர் அளித்த பதில்: தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் மீன் வளர்ப்பு உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்க 
  மீன்வளத்துறைக்கு பொதுப்பணித் துறை பரிந்துரை செய்யவேண்டும். 
  தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத் தொகை விரைவில் வழங்கப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு பிரீமியம் தொகை செலுத்தியதற்கான ரசீதை உடனுக்குடன் வழங்க கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். 
  முல்லைப் பெரியாற்றிலிருந்து ஆண்டிபட்டி வட்டாரம், க.மயிலை ஒன்றியப் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவர ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார். 

  கணக்கில் வராத கண்மாய்
  கடந்த 1935-இல் வருவாய்த் துறை வரைபடத்தில் இடம்பெற்றுள்ள தேனி அருகே உப்புக்கோட்டை வருவாய் கிராமத்துக்குள்பட்ட போடேந்திரபுரம் கண்மாயின் கரைகள் உடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும், அதனை மீட்டுத் தரவேண்டும் என்றும், போடேந்திரபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
  ஆனால், இந்தக் கண்மாய் பொதுப்பணித் துறையின் கணக்கில் வரவில்லை என்று, மஞ்சளாறு வடிநிலக் கோட்டம் மற்றும் உத்தமபாளையம் பொதுப்பணித் துறை பொறியாளர்கள் கூறினர். இருப்பினும், விவசாயிகள் சமர்ப்பித்துள்ள வரைபடத்தின் அடிப்படையில், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் கூட்டாய்வு செய்து, இக்கண்மாயை கண்டறிந்து மீட்கவேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai