கம்பத்தில் வாடகை ஜீப் ஓட்டுநர்கள்-காவல் துறையினர் பேச்சுவார்த்தை தோல்வி

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு வாகனங்களில் கூடுதல் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் விவகாரம்

தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு வாகனங்களில் கூடுதல் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் விவகாரம் சம்பந்தமாக, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால், வாடகை ஜீப் ஓட்டுநர்களுக்கு சிக்கல் நீடிக்கிறது.
தேனி மாவட்டம், போடியிலிருந்து கேரளம் செல்லும் மலைப் பாதையில், சில நாள்களுக்கு முன் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ஜீப் விபத்துக்குள்ளாகி சிலர் உயிரிழந்தனர். இதனால், வாகனங்களில் அளவுக்கு அதிகமான தொழிலாளர்களை ஏற்றிச்செல்ல தடை விதிக்கப்பட்டதுடன் அபராதமும் வசூலிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து, வியாழக்கிழமை கூடலூர்-லோயர் கேம்ப் சாலையில் வாடகை ஜீப் ஓட்டுநர்கள், ஆண், பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, இரவு கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னக்கண்ணு வாடகை ஜீப் ஓட்டுநர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், வாடகை  ஜீப் உரிமையாளர் சங்கம் சார்பில் பாஸ்கரன், 9 பேர் முதல் 12 பேர் வரை ஏற்றிச்செல்ல முன்னர் அறிவிக்கப்பட்டதை தொடரவேண்டும் என்றார். 
 ஆனால் காவல் துறையினர் மறுத்து, கண்டிப்பாக மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ஜீப்பை இயக்க வேண்டும் என்றும், கூடுதல் பயணிகளை ஏற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாமல் கலைந்து சென்றனர்.
இதில், காவல் ஆய்வாளர்கள் (வடக்கு) சிலைமணி, (தெற்கு) கீதா, உத்தமபாளையம் த.முருகன் மற்றும் வாடகை ஜீப் ஓட்டுநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com