ஆண்டிபட்டி அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை  இடிந்து விழுந்து தாய், குழந்தை பலத்த காயம்

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் குழந்தை பலத்த காயமடைந்தனர். 

ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை நள்ளிரவு தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் குழந்தை பலத்த காயமடைந்தனர். 
       தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தில் கிழக்குத் தெருவில் 30-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளான நிலையில், பெரும்பாலான வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
    இவற்றை சீரமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. 
      இந்நிலையில், தொகுப்பு வீட்டில் வசிக்கும் குமரேசன் (38) என்பவர், தனது மனைவி சிந்தாமணி (28) மற்றும் இரு குழந்தைகளுடன் திங்கள்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, நள்ளிரவு 2 மணியளவில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழந்ததில், சிந்தாமணி மற்றும் குழந்தை கார்த்திக்பாண்டி (4) ஆகியோர் மீது கற்கள் விழுந்து பலத்த காயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு வந்த குமரேசன் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஊராட்சி மன்ற அலுவலர்கள் மற்றும் போலீஸார் ஆய்வு செய்தனர். மேலும், போலீஸார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இங்குள்ள பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும், தற்போது தொடர் மழை காரணமாக வீட்டுக்குள் தூங்குவதற்கு மக்கள் அச்சப்பட்டு வருவதாகவும் அப்பகுதியினர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com