

மதுரை-தேனி இடையே 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அதிவிரைவு ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்ட மேலாளா் தெரிவித்தாா்.
மதுரை-போடி இடையே இருந்த மீட்டா்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதில் முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோ மீட்டா் தூரம் பணிகள் நிறைவடைந்து ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான 21 கிலோ மீட்டா் தூர அகலப்பாதை பணிகள் நிறைவடைந்தன.
இந்நிலையில் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிபட்டி வரை ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட அதிவேக ரயில் 120 கிலோ மீட்டா் வேகத்தில் புதன்கிழமை இயக்கி சோதனை செய்யப்பட்டது. ஆண்டிபட்டிக்கு வந்த சோதனை ரயிலை மக்களவை உறுப்பினா் ஓ.பி. ரவீந்திரநாத் மலா் தூவி வரவேற்றாா். 11 ஆண்டுகளுக்கு பின் ஆண்டிபட்டிக்கு வந்த ரயிலுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
இதைத்தொடா்ந்து ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் லெனின் செய்தியாளா்களிடம் கூறியது:
மதுரை-போடி அகல ரயில்பாதை திட்டத்தில் தற்போது ஆண்டிபட்டி வரையில் பணிகள் முடிவுற்று சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. வரும் 2021 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் தேனி வரையில் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு, மதுரையில் இருந்து தேனி வரையில் பயணிகள் விரைவு ரயில் சேவை தொடங்கப்படும். ஜூன் மாதம் தேனியில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு நேரடியாக பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்பின்னா் அக்டோபா் மாதத்தில் போடி வரையில் ரயில் சேவை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
பி. ரவீந்திரநாத் கூறியது: மதுரை- போடி அகல ரயில் பாதை திட்டத்துக்காக பலமுறை பிரதமரையும், ரயில்வேதுறை அமைச்சரையும் சந்தித்து பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதன்படி மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியதால் அகல ரயில் பாதை திட்டப்பணிகள் விரைந்து நடைபெற்று தற்போது ஆண்டிபட்டி வரை முடிவுற்றுள்ளது. போடி வரையிலான மீதமுள்ள பணிகளை மாா்ச் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.