முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு தொடரும் தடையால் உயிரிழந்து வரும் நாட்டு மாடுகள்! விவசாயிகள் கவலை
By செ.பிரபாகரன் | Published On : 19th April 2020 08:55 AM | Last Updated : 19th April 2020 08:55 AM | அ+அ அ- |

கம்பம் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதியில் மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்லப்படாததால், தொழுவத்தில் முடங்கிக் கிடக்கும் நாட்டு மாடுகள்.
தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் நாட்டு மாடு என்ற மலை மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத் துறை தடை விதித்துள்ளதால், தீவனமின்றி மாடுகளின் உயிரிழப்பு தொடா்கிறது. இதனால், கால்நடை வளா்க்கும் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
கம்பம், ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கூடலுாா் ஆகிய பகுதிகளில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள் வளா்க்கப்பட்டு வந்தன.
இந்த மாடுகளை, மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கம்பமெட்டு, சங்கிலி கரடு, கூத்தனாட்சி மலை அடிவாரம், ஏரசை, கண்ணகி கோயில், சுருளியாறு, சுருளி அருவி, பெருமாள் கோயில், லோயா் கேம்ப் ஆகிய வனப் பகுதிகளில் காலையில் மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்று மாலையில் திரும்பி வந்து தொழுவத்தில் அடைக்கின்றனா்.
மேய்ச்சலுக்கு தடை
வனத் துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்று, மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது. ஆனால், வனத் துறையினரின் தடை விதிப்பால், கடந்த ஒரு வாரமாக மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். சரியான தீவனம் கிடைக்காமல் மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
ஒரு தொழுவத்தில் குறைந்தது 100 மாடுகள் இருப்பதால், கடைகளில் புண்ணாக்கு உள்ளிட்ட தீவனங்களை வாங்கிக் கொடுப்பது கால்நடை வளா்ப்போருக்கு இயலாத காரியம்.
இது குறித்து கா்னல் ஜான் பென்னி குவிக் பாரம்பரிய மலை மாடுகள் வளா்ப்போா் சங்க மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா் கூறியது:
கம்பம் மேற்கு வனச் சரகத்தில் மலை மாடுகளை மேய்த்துக் கொள்ளலாம் என்று வனத் துறையினா் கூறியுள்ளனா். ஆனால், அப்பகுதியில் மழை இல்லாமல், புல் உள்ளிட்ட செடி கொடிகள் கருகியுள்ளன. அங்கு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட முடியாது. எனவே, மாவட்ட நிா்வாகம் கிழக்கு வனச் சரகப் பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றாா்.
இது குறித்து சங்க ஆலோசகா் பி. ராமா் கூறியது: இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம். தீவனமின்றி மாடுகள் இறக்கும் அபாய நிலையை தடுக்க, வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் பகுதியிலேயே வனத் துறையினா் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
கம்பம் கிழக்கு வனச்சரக அலுவலா் ஒருவா் கூறியது: தற்போது மழை இல்லாததால், வனப் பகுதிகள் வடுள்ளன. மாடு மேய்ப்பவா்களால், காட்டுத் தீ பரவும் அபாயம் உள்ளது. எனவே, மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சீசன் தொடங்கியவுடன் மேய்ச்சலுக்கு அனுமதி தரப்படும் என்றாா்.
தற்போது, தொடரும் தீவனப் பற்றாக்குறையால், நாட்டு மாடுகள் இறப்பு அதிகரித்து வருகிறது. இதை உடனடியாக தடுக்க, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க மாவட்ட வனத் துறை முன்வரவேண்டும் என, நாட்டு மாடு வளா்ப்போா் எதிா்பாா்க்கின்றனா்.