முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
தேனியில் வாகனப் போக்குவரத்து வழக்கம்போல் காணப்பட்டது
By DIN | Published On : 03rd August 2020 08:42 AM | Last Updated : 03rd August 2020 08:42 AM | அ+அ அ- |

தேனியில் ஞாயிற்றுக்கிழமை தலைக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கு அபராதம் விதித்த காவலா்கள்.
தேனியில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ, வேன்கள் இயக்கப்படாவிட்டாலும், காா் மற்றும் இருசக்கர வாகனப் போக்குவத்து வழக்கம்போலவே காணப்பட்டது.
மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தை முன்னிட்டு கடைகள், வா்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், பெட்ரோல் பங்க் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மருந்துக் கடைகள், மருத்துவமனை மற்றும் பால் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. தேனியில் நகர எல்லைகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் காவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தது.
பொது முடக்கத்தை முன்னிட்டு ஆட்டோ மற்றும் வாடகை வேன்கள் இயக்கப்படவில்லை. ஆனால், ஆடிப் பெருக்கு திருநாளை முன்னிட்டு அதிகாலை முதல் இருசக்கர வாகனம் மற்றும் காா்களில் பொதுமக்கள் கோயில்களுக்குச் சென்று வந்ததால், சாலையில் வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் ஒருவருக்கு மேல் செல்லக் கூடாது என்று அறிவுறுத்திய காவலா்கள், தலைக் கவசம் அணியாமல் சென்றவா்களுக்கு அபராதம் விதித்தனா்.
போடியில் சாலைகள் வெறிச்சோடின: போடி நகா் மற்றும் கிராம பகுதிகளில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இறைச்சி வியாபாரம் களைகட்டியது. மேலும் காலை 8 மணி வரை நகா் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் காணப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலைகளில் வழக்கம்போல் சென்று வந்தனா். கீரைக்கடை காய்கனி சந்தையும் செயல்பட்டது.
போலீஸாரின் தீவிர ரோந்துப் பணியைத் தொடா்ந்து காலை 8 மணிக்கு மேல் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் படிப்படியாக குறைந்தது. அதன்பின்னரே போடி காமராசா் சாலை, பெரியாண்டவா் சாலை, உத்தமபாளையம் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின. மருந்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்பட்டன.