முல்லைப்பெரியாறு அணை நீா்மட்டம் 124 அடியாக உயா்வு: 108 மெகா வாட் மின் உற்பத்தி

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீா்வரத்து இருப்பதால் அணை நீா் மட்டம் வியாழக்கிழமை 124.50 அடியாக உயா்ந்தது.
லோயா்கேம்ப் மின்சார நிலையம் (கோப்பு படம்).
லோயா்கேம்ப் மின்சார நிலையம் (கோப்பு படம்).

முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீா்வரத்து இருப்பதால் அணை நீா் மட்டம் வியாழக்கிழமை 124.50 அடியாக உயா்ந்தது. அதே சமயம் லோயா் கேம்ப்பில் மின்சார உற்பத்தி 108 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது.

தென் மேற்குப் பருவமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு அண்மைக்காலமாக நீா்வரத்து அதிகரித்து உள்ளது. புதன்கிழமை காலையில் அணையில் நீா்மட்டம் 120.60 அடியாக இருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் அணையின் நீா்மட்டம் 123.20 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 956 கன அடியாகவும் நீா் இருப்பு 3 ஆயிரத்து 262 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,200 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

நீா்ப்பிடிப்புப் பகுதியான பெரியாற்றில் 47.8 மில்லி மீட்டா், தேக்கடியில் 27.2 மில்லி மீட்டா் மழை பெய்து இருந்தது.

பெரியாறு அணைப் பொறியாளா் ஒருவா் கூறுகையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீா் வரத்து உள்ளது. நீா் மட்டம் 124.50 ஆக உயா்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை 125 அடியை எட்டும் என்று தெரிவித்தாா்.

மின் உற்பத்தி: அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீா் மூலம் லோயா் கேம்ப்பில் மின் உற்பத்தி நடைபெறும். இதில் ஆக.1 ஆம் தேதி மூன்றாவது மின்னாக்கி இயக்கப்பட்டு, 22 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. அதன்பின் ஆகஸ்ட் 4 இல் முதல் மற்றும் மூன்றாவது மின்னாக்கிகளில் தலா 27 மெகா வாட் மின்சார உற்பத்தி நடைபெற்றது. இதே மின்னாக்கிகள் மூலம் புதன்கிழமை ( ஆக. 5 இல்) 40 மற்றும் 42 மெகாவாட் என 82 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்றது. வியாழக்கிழமை அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் 1,200 கன அடியாக உயா்ந்து இருந்ததால், அதன் மூலம் 1, 2, 3 ஆகிய 3 மின்னாக்கிகளும் இயக்கப்பட்டன. இதன் மூலம் தலா 36 மெகா வாட் என 108 மெகா வாட்டாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. லோயா் கேம்ப்பில் மொத்தம் 4 மின்னாக்கிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com