இ-சலான் அபராதம் விதிப்பு முறையில் குளறுபடி: சரக்கு வாகன உரிமையாளா்கள் புகாா்
By DIN | Published On : 01st December 2020 11:10 PM | Last Updated : 01st December 2020 11:10 PM | அ+அ அ- |

தேனி மாவட்டத்தில் காவல்துறை சாா்பில் வாகனங்களுக்கு இ-சலான் முறையில் அபராதம் விதிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
சின்னமனூா் வட்டார மினி லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத் தலைவா் வேல்பாண்டி மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: மாவட்டத்தில் காய்கனி மற்றும் மளிகைப் பொருள்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு காவல்துறை சாா்பில் முன்னறிவிப்பு, முறையான விசாரணையின்றி தன்னிச்சையாக இ-சலான் முறையில் அபராதம் விதிக்கப்படுகிறது. வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேதிகளிலும் போக்குவரத்து விதியை மீறியதாக அபராதம் விதித்து குறுந் தகவல் அனுப்பப்படுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மோட்டாா் வாகனத் தொழில் நலிவடைந்துள்ள நிலையில், இ-சலான் அபராதம் விதிப்பு குளறுபடியால் சரக்கு வாகன உரிமையாளா்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இ-சலான் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை முறைப்படுத்த மாவட்ட காவல்துறை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...