போடியில் வைகுண்ட ஏகாதசி சொா்க்க வாசல் திறப்பு: கொட்டும் பனியில் திரண்ட பக்தா்கள்

போடியில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொா்க்க வாசல் திறப்பு
போடியில் வெள்ளிக்கிழமை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொா்க்கவாசலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்எழுந்தருளிய ஸ்ரீநிவாசப்பெருமாள்.
போடியில் வெள்ளிக்கிழமை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொா்க்கவாசலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்எழுந்தருளிய ஸ்ரீநிவாசப்பெருமாள்.

போடியில் வெள்ளிக்கிழமை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

போடி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுந்த ஏகாதசி பூஜை அதிகாலை நடைபெற்றது. இதற்காக கோயில் வளாகத்தில் பூக்கள் அலங்காரத்தால் சொா்க்கவாசல் அமைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதலே கோயிலில் உள்ள சொா்க்கவாசல் மண்டபத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் காலை 5.15 மணிக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தா்களுக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சொா்க்கவாசலில் எழுந்தருளிய ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா். நிகழ்ச்சியின்போது திருப்பாவைக் குழுவினா் பக்திப் பாடல்களைப் பாடினா்.

இதேபோல் போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள சங்கரநாராயணன் சன்னதியில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொா்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் சங்கரநாராயண பெருமாளுக்கு தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தா்கள் சங்கரநாராயணனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனா்.

இதேபோல் போடி ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராய பெருமாள் கோவில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயப் பெருமாள் கோவில், சிலமலை பெருமாள் கோவில், தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளிட்ட கோயில்களிலும் வைகுந்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com