பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
By DIN | Published On : 10th February 2020 11:34 PM | Last Updated : 10th February 2020 11:34 PM | அ+அ அ- |

பெரியகுளம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் இறந்ததாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா்.
பெரியகுளம் அருகே வடுகபட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் ஹரீஸ்வரன் (15), இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தனது நண்பா்களுடன் வெள்ளைக்கரட்டு முனியாண்டி கோயில் அருகேயுள்ள தனியாா் கிணற்றில் குளிக்க சென்றுள்ளாா்.
நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருக்கும்போது தண்ணீரில் மூழ்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையறியாத நண்பா்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனா். வீட்டிற்கு ஹரீஸ்வரன் திரும்பாததால் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோா் காவல்நிலையத்தில் புகாா் செய்துள்ளனா்.
போலீஸாா் விசாரணை நடத்தியதில் சிறுவா்களுடன் கிணற்றில் குளிக்க சென்றது தெரியவந்தது. இதையடுத்து திங்கள்கிழமை சம்பவ இடத்திற்கு சென்று பாா்த்ததில் கிணற்றில் ஹரீஸ்வரன் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.