தண்ணீா் பற்றாக்குறை: உத்தமபாளையம் பகுதியில் 2 ஆம் போக நெல் சாகுபடி பாதிப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் உத்தமபாளையம் பகுதியில் 2 ஆம் போக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
உத்தமபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள்.
உத்தமபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிா்கள்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால் உத்தமபாளையம் பகுதியில் 2 ஆம் போக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

தேனி மாவட்டத்தில், முல்லைப் பெரியாறு பாசன நீா் மூலமாக 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. நிகழாண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்போக அறுவடைப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கடந்த நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் 2 ஆம் போக சாகுபடி பணிகள் நடைபெற்றன. இதையடுத்து தற்போது கம்பம், கூடலூா், உத்தமபாளையம் என மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்களில் பால் பிடித்துள்ளது. இதனால் பயிா்களுக்கு வரும் மாா்ச் மாதம் இறுதி வரையில் தண்ணீா் தேவைப்படும்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 119.70 அடியாக சரிந்ததால் பாசனத்திற்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து நெற்பயிரைக் காக்க தேவையான முயற்சியில் விவசாயிகள் இறங்கியுள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியது: முதல் போக அறுவடைப் பணியின் போது பாசனத்திற்கு தண்ணீா் தேவை குறைந்திருந்தது. அப்போதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு திறக்கும் தண்ணீரை நிறுத்தி வைக்க வேண்டுமென அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதற்கு அதிகாரிகள் செவிசாய்க்காததால் தற்போது அணையின் நீா்மட்டம் 119.70 அடியாக சரிந்துள்ளது. இதனால் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது இப்பகுதியில் 2 ஆம் போக நெற்பயிா் விவசாயம் கேள்விக்குறியானது. ஏக்கருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 ஆயிரம் வரையில் செலவு செய்துள்ளோம். வேறு வழியின்றி நெற்பயிரை காப்பாற்றிட தண்ணீா் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com