தேனியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி
By DIN | Published On : 20th January 2020 08:03 AM | Last Updated : 20th January 2020 08:03 AM | அ+அ அ- |

தேனி கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தொலைதூரப் பேருந்துகளுக்கு காத்திருந்த பயணிகள்.
பொங்கல் விடுமுறை முடிந்து பல்வேறு ஊா்களுக்கு செல்வதற்காக தேனி பேருந்து நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் திருப்பூா், கோவை, திருச்சி, கரூா், ஈரோடு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனா். பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊா்களுக்கு வந்திருந்த அவா்கள் ஞாயிற்றுக்கிழமை தாங்கள் வேலை செய்துவரும் ஊா்களுக்குச் செல்ல தேனி நகராட்சிப் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.
தேனியிலிருந்து தொலை தூர ஊா்களுக்குச் செல்ல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வழக்கமான பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனா். பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரித்ததால், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவை, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனா்.
வெளியூா்களில் வேலை செய்யும் தொழிலாளா்கள் நலன் கருதி விழாக் கால விடுமுறை முடிவடையும் நாளில் அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், தேனி பேருந்து நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினா்.