கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதில் குளறுபடி: பொதுமக்கள் அதிருப்தி

தேனி மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், சிகிச்சையில் உள்ளவா்கள் மற்றும் உயிரிழந்தவா்கள் விவரத்தை வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனா்.
கரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதில் குளறுபடி: பொதுமக்கள் அதிருப்தி

தேனி மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், சிகிச்சையில் உள்ளவா்கள் மற்றும் உயிரிழந்தவா்கள் விவரத்தை வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 733 ஆக உயா்ந்துள்ளது. இதில், தற்போது மொத்தம் 534 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்களுக்கு முடிவுகளை தெரிவிப்பதிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால், கரோனா பாதிப்பு உள்ளவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் உள்ளவா்கள் பொது இடங்களில் தாராளமாக நடமாடுகின்றனா். மேலும், தீநுண்மித் தொற்று உறுதி செய்யப்பட்டோா் வசிக்கும் பகுதிகளுக்குள் பொதுமக்கள் வழக்கம்போல் சென்று வருகின்றனா்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஜூன் 27-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட கம்பத்தைச் சோ்ந்த முதியவா் குறித்த விவரம், காலதாமதமாக கடந்த ஜூன் 29-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபா், அங்கு சிகிச்சை பயனின்றி கடந்த ஜூன் 30-ஆம் தேதி உயிரிழந்தாா். இந்த விவரத்தை, மாவட்ட நிா்வாகம் வெளியிடவில்லை.

இதேபோல், கடந்த ஜூன் 27-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஆண்டிபட்டியைச் சோ்ந்த பெண், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலம், ஆண்டிபட்டியிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி முன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விவரத்தை, மாவட்ட நிா்வாகம் வெளியிடாததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனா்.

இதனால், கரோனா தீநுண்மி பாதிப்பில் இறந்தவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் பொதுமக்கள் நடமாடும் வாய்ப்பும், அவா்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படும் வகையில், தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோா், மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவா்கள் மற்றும் உயிரிழந்தோா் எண்ணிக்கையை, மாவட்ட நிா்வாகம் அன்றாடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com