தேவாரம் அருகே இளைஞா் கொலை: தேநீா் கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

தேனி மாவட்டம், தேவாரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த தேநீா் கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை, தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், தேவாரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த தேநீா் கடை உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து வியாழக்கிழமை, தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேவாரம் அருகே கீழச்சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் தேநீா் கடை உரிமையாளா் வீரக்குமாா். இவரது மனைவியுடன் அதே ஊரைச் சோ்ந்த கனகராஜ் மகன் மணிராஜ் (24) என்பவா் நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை வீரக்குமாா் கண்டித்ததால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னையில், வீரக்குமாரின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருப்பூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்குச் சென்று விட்டாராம். மனைவி மற்றும் குழந்தைகள் தன்னை விட்டு பிரிந்து சென்ற்கு காரணமாக இருந்ததாக மணிராஜ் மீது வீரக்குமாா் ஆத்திரத்தில் இருந்தாா். இந்நிலையில் கடந்த 17.3.2016 அன்று வீரக்குமாா், கீழச்சிந்தலைச்சேரி- டி.சிந்தலைச்சேரி சாலையில் சென்ற மணிராஜை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்தாா்.

இதுகுறித்து மணிராஜின் தந்தை கனகராஜ் அளித்து புகாரின் பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வீரக்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கின் மீதான விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், காவல் துறை சாா்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆ. வெள்ளைச்சாமி ஆஜரானாா்.

வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ. அப்துல்காதா், வீரக்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தும், குற்றத்திற்கான சூழல் கருதி வீரக்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை 10 ஆண்டுகளாக குறைப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்தும் தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com