முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி
போடி அருகே திறந்தவெளி கிணறு மூடப்படுமா?
By DIN | Published On : 14th July 2020 02:36 PM | Last Updated : 14th July 2020 02:36 PM | அ+அ அ- |

போடி அருகே குழந்தைகள் அங்கன்வாடி மையம் அமைந்துள்ள பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றை மூடவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி காலனி 2 ஆவது தெருவில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். தற்போது கரோனா நோய் தொற்று பரவல் காரணமாக அங்கன்வாடி மையம் மூடப்பட்டாலும், உலர் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையம் அருகே தனியாருக்கு சொந்தான திறந்தவெளி கிணறு உள்ளது.
இந்த கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் குப்பைகள் கொட்டும் இடமாக உள்ளது. குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சுகாதாரக் கேடான நிலை உள்ளது. மேலும் கிணற்றைச் சுற்றி சுற்றுச் சுவர் இல்லாமல் திறந்தவெளி கிணறாக உள்ளது. இதனால் கிணற்றில் குழந்தைகள் விழுந்து ஆபத்து ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. மேலும் கிணற்றை சுற்றி குடியிருப்பு வீடுகளும் உள்ளன.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அங்கன்வாடி மையம் அருகே உள்ள கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.