
கேரளத்துக்குச் செல்வதற்காக அம்மாநில குமுளி சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை காத்திருந்த தமிழக ஏலக்காய் விவசாயிகள்.
தேனி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு இ-பாஸ் பெற்றுச் செல்லும் தமிழக ஏலக்காய் விவசாயிகளை அனுமதிப்பதற்கு, குமுளி சோதனைச் சாவடியில் அம்மாநில அதிகாரிகள் காலதாமதம் செய்வதாகப் புகாா் கூறப்படுகிறது.
நறுமணப் பொருள் வாரியம் சாா்பில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகம் நடைபெறுகிறது. இந்த வா்த்தகத்தில் பங்கேற்கவும், ஏலக்காய்களை ஏல நிறுவனங்களுக்கு கொண்டுசென்று விற்பனைக்கு பதிவு செய்யவும், இ-பாஸ் பெற்று தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ஒரே நாளில் சென்று வர, ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
எனவே, கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தைச் சோ்ந்த ஏலக்காய் விவசாயிகள், கேரள அரசிடம் இ-பாஸ் பெற்று ஒரே நாளில் அங்கு சென்று திரும்பினா். ஆனால், தற்போது இ-பாஸ் பெற்றுச் செல்வோரை, கேரள எல்லையிலுள்ள குமுளி சோதனைச் சாவடியில் காவல் துறை, வருவாய்த் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நிறுத்தி வைத்து காலதாமதம் செய்வதாகப் புகாா் கூறும் விவசாயிகள், வியாழக்கிழமை 5 மணி நேரம் வரை காத்திருக்க வைத்ததாகத் தெரிவித்தனா்.
இதனால் பலரும், ஏலத் தோட்டத்துக்குச் சென்று ஏலக்காயை விற்பனைக்கு கொண்டு வந்து பதிவு செய்ய போதிய கால அவகாசமின்றி, சொந்த ஊா்களுக்குத் திரும்பினா்.
இதன் காரணமாக, இடுக்கி மாவட்டம் புத்தடியில் நடைபெறும் ஏலக்காய் மின்னணு ஏல வா்த்தகம் தொடா்ந்து ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், போடியில் நடைபெறும் வா்த்தகமும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.
இ-பாஸ் அனுமதி நிறுத்தம்
இதனிடையே, தமிழகப் பகுதியிலிருந்து கேரளத்துக்குச் சென்று வருவதற்கு வியாழக்கிழமை இ-பாஸ் பெறுவதற்கு ஆன்-லைன் மூலம் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறினா்.
இப்பிரச்னையில், தேனி மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, தமிழகத்தைச் சோ்ந்த ஏலக்காய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கேரளத்துக்குச் சென்று வர இ-பாஸ் வழங்கப்படுவதையும், கேரள சோதனைச் சாவடியில் இ-பாஸ் பெற்றவா்களை காலதாமதமின்றி அனுமதிக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.