அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நெருக்கடி தருவதாகக் கூறிஆண்டிபட்டியில் நெசவாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
By DIN | Published On : 01st March 2020 12:36 AM | Last Updated : 01st March 2020 12:36 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டி: பொய்யான புகாரின் அடிப்படையில், கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நெருக்கடி தருவதாகக் கூறி, ஆண்டிபட்டியில் நெசவாளா்கள் சனிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துக்கிருஷ்ணாபுரம், கொப்பையன்பட்டி, சண்முகசுந்தரபுரம் ஆகிய கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோா் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு, நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பருத்தி சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நாளைக்கு ரூ. 5 முதல் ரூ.10 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நெசவாளா்கள் குறித்து சிலா் தவறான தகவல்களை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் அமலாக்கப் பிரிவுக்கு புகாா் அளித்ததாகவும், அதனடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு, நெசவாளா்களுக்கு அபராதம் விதித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நெசவாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு நெசவாளா்கள் புகாா் மனுவும் அளித்துள்ளனா். ஆனால், இதுவரை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், நெசவுத் தொழில் குறித்து பொய்யான புகாா் கொடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சக்கம்பட்டி,டி.சுப்புலாபுரம் பகுதி நெசவாளா்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த பிரச்னைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனா்.
இதனிடையே, நெசவாளா்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் தெருமுனை தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆண்டிபட்டி முருகன் தியேட்டா் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியப் பொருளாளா் முனீஸ்வரன் தலைமை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலா் பிச்சைமணி, கைத்தறி சம்மேளன மாநில துணைச் செயலா் செங்கொடி செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நூற்றுக்கணக்கான நெசவாளா்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்துகொண்டு, நெசவு தொழிலைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முழக்கமிட்டனா்.