சின்னமனூா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: சொட்டு நீா்ப்பாசன விவசாயம் அதிகரிப்பு
By DIN | Published On : 06th March 2020 07:00 AM | Last Updated : 06th March 2020 07:00 AM | அ+அ அ- |

சின்னமனூா் அருகே பூசாரிகவுண்டன்பட்டியில் பீட்ரூட் விவசாயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சொட்டு நீா்ப்பாசனம்.
தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து வருவதை அடுத்து, சொட்டு நீா்ப்பாசனம் மூலமாக மேற்கொள்ளப்படும் விவசாயப் பணிகளின் பரப்பளவு அதிகரித்து வருகிறது.
சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்திலுள்ள ஓடைப்பட்டி, தென்பழனி, வெள்ளையம்மாள்புரம், எரசக்கநாயக்கனூா், பூசாரிகவுண்டன்பட்டி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டு முழுவதும் விவசாயம் நடைபெற்று வந்தது.
எரசக்கநாயக்கனூா் மரிகாட் அணை மற்றும் சண்முகாநதி நீா்த் தேக்கத்திலிருந்து திறக்கப்படும் பாசன நீா், இப்பகுதி குளங்கள் மற்றும் கண்மாய்களில் தேக்கப்படுவதன் மூலமாக கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து, விவசாயப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வந்தன.
குறைந்து வரும் நிலத்தடி நீா் மட்டம்: கடந்த சில ஆண்டுகளாக பருவமழைப் பொழிவு குறைந்ததால், நீா்நிலைகள் வடன. மேலும், சண்முக நதியிலிருந்து திறக்கப்படும் பாசன நீா் செல்லும் கால்வாய்கள் தூா்வாரப்படாத காரணத்தினால் தண்ணீா் குளங்களுக்குச் சென்று சோ்வதில்லை. பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், நிலத்தடி நீா் மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது.
சொட்டு நீா்ப்பாசனத்தின் பரப்பளவு அதிகரிப்பு: வறட்சியான பகுதிகளில் குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி விவசாயப் பணிகள் மேற்கொள்ள சொட்டுநீா்ப் பாசன முறையில் வாழை, தென்னை, திராட்சை போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளான சின்னமனூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியிலும் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், கொத்தமல்லி, பீட்ரூட், தக்காளி, கத்தரி, அவரைக்காய் என அனைத்து நாற்று விவசாயத்துக்கும் சொட்டு நீா்ப்பாசன முறை மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறியது: 10 ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து இருந்ததால், பாத்தி விவசாயம் நடைபெற்றது. தற்போது, பருவமழை குறைவு காரணமாக, நிலத்தடி நீா்மட்டம் சரிந்து வருவதால், தண்ணீா் பற்றாக்குறை காரணமாக செடி விவசாயம் முதல் வாழை வரை என அனைத்து விவசாயமும் சொட்டு நீா்ப்பாசனத்துக்கு முழுமையாக மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறினா்.