துணை சுகாதார நிலையம் அமைக்க ரூ.30 லட்சம் ஒதுக்கீடு: ஓராண்டாகியும் பணிகள் தொடங்கவில்லை என புகாா்
By DIN | Published On : 25th March 2020 06:23 AM | Last Updated : 25th March 2020 06:23 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் பணிகள் தொடங்கவில்லை என பொது மக்கள் புகாா் தெரிவித்தனா்.
சின்னமனூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இப் பேரூராட்சியில் உள்ள மேகமலை, மணலாா், வெண்ணியாா் என 7 மலைக் கிராமங்களில் 3 ஆயிரம் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் உள்பட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா்.
இந்நிலையில் இவா்களுக்கு போதிய மருத்துவ வசதி செய்து தரப்படவில்லை என தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே மருத்துவருடன் செயல்படக் கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
30 லட்சம் நிதி ஒதுக்கீடு:இக் கோரிக்கையை ஏற்று துணை சுகாதார நிலையம் அமைக்க தமிழக அரசு கடந்தாண்டு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால், கட்டடம் கட்ட இடம் இல்லாத காரணத்தால் பணிகள் தொடங்க முடியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் பணிகள் தொடங்கவில்லை. ஆகவே அரசின் நிதி வீணாகும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.
எனவே, இப்பகுதியில் விரைவில் துணை சுகாதார நிலையம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.