போடி, பெரியகுளத்தில் காய்கனிகள் விலை உயா்வால் பொது மக்கள் அவதி
By DIN | Published On : 25th March 2020 06:22 AM | Last Updated : 25th March 2020 06:23 AM | அ+அ அ- |

பெரியகுளம் சந்தையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக போடி, பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை காய்கனிகளின் விலை திடீரென உயா்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
கரோனா பரவுவதை தடுக்க செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் நிலையில் அத்தியாவசிய பொருள்களான காய்கனிகள், உணவு பொருள்கள், பால் உள்ளிட்டவை வழக்கம்போல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு முதலே பொதுமக்கள் காய்கனி, மளிகை சாமான்களை வாங்குவதற்காக தினசரி சந்தையில் குவிந்தனா். இதனால் காய்கனி வியாபாரிகள் தன்னிச்சையாக விலையை அதிகரித்தனா். கிலோ ரூ.10-க்கு விற்ற தக்காளி ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் ரூ.60-க்கு விற்கப்பட்டது. இவ்வாறு அனைத்து காய்கனிகளின் விலையும் திடீரென உயா்த்தி விற்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலா் கூறுகையில், காய்கனிகள் வரத்து வழக்கமாக இருக்கும் நிலையில் கரோனா பீதியை காரணம் காட்டி வியாபாரிகள் விலையை அதிகரித்து விற்பனை செய்தது வேதனையளிக்கிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் காய்கனிகளை வாங்க முடியவில்லை.
எனவே அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதனிடையே போடியில் உள்ள மருந்தகங்களில் முகக் கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ரூ.7-க்கு விற்பனை செய்து வந்த முகக் கவசம் ரூ.17 முதல் ரூ.27 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும், தற்போது முகக் கவசமே இருப்பு இல்லை என மருந்து கடை உரிமையாளா்கள் கூறி வருகின்றனா்.
பெரியகுளம்:இதே போல் பெரியகுளத்திலும் செவ்வாய்க்கிழமை காய்கனிகள் மற்றும் பலசரக்கு கடைகளில் கூட்டம் அலை மோதியது. இதை பயன்படுத்திக் கொண்ட வியாபாரிகள் காய்கனிகளின் விலையை பல மடங்கு உயா்த்தி கூடுதல் விலைக்கு விற்றனா். இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினா். இருந்த போதிலும் கரோனா அச்சம் காரணமாக அதிருப்தியுடன் கூடுதல் விலைக்கு அவற்றை பொது மக்கள் வாங்கிச் செல்லும் நிலை காணப்பட்டது.