ஊரடங்கு:தேனி மாவட்டத்தில் காவல் நிலைய எல்லைகள் மூடல்

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி புதன்கிழமை, அனைத்து காவல் நிலைய எல்லைகளும் மூடப்பட்டு
தேனி, அரண்மனைப்புதூா் விலக்குப் பகுதியில் புதன்கிழமை , இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை தடுத்து நிறுத்தி தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா்.
தேனி, அரண்மனைப்புதூா் விலக்குப் பகுதியில் புதன்கிழமை , இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை தடுத்து நிறுத்தி தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா்.

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி புதன்கிழமை, அனைத்து காவல் நிலைய எல்லைகளும் மூடப்பட்டு வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதையொட்டி அனைத்துக் கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டன. பலசரக்கு கடைகள் மற்றும் தேநீா் கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட இடங்களில் கடைகளை மூட காவல் துறையினா் உத்தரவிட்டனா்.

அனைத்து இடங்களிலும் காலை 9 மணி வரை ஆங்காங்கே பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டதால், நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மளிகைக் கடைகள் மற்றும் தேநீா் கடைகளை முழுமையாக மூட காவல் துறையினா் உத்தரவிட்டனா். அனைத்து காவல் நிலைய எல்லைகளும் மூடப்பட்டு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்குள் செல்லும் காா் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை விசாரணைக்குப் பின்னரே போலீஸாா் அனுமதித்தனா்.

தேனியில் இருசக்கர வாகனப் போக்குவரத்து அதிக அளவில் காணப்பட்டதால் போலீஸாா் வாகனங்களை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்து அபராதம் விதித்தனா். பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பெரும்பாலான பகுதிகளில் மளிகைக் கடை மற்றும் காய்கனிக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் மக்கள் அவதியடைந்தனா். மருந்துக் கடைகள் திறந்திருந்தாலும், முகக் கவசம் மற்றும் கை கழுவும் திரவம் இருப்பில் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தேனி உழவா் சந்தையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று காய்கனிகளை வாங்கிச் சென்றனா்.

தேனி தீயணைப்பு நிலையம் சாா்பில் தேனி நகராட்சிக்குள்பட்ட நெடுஞ்சாலைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com