போடி நகர சாலைகள் மூடல்: வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் கணக்கெடுப்பு

போடியில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக போடி நகரத்திற்குள் நுழையும் சாலைகளில் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தினா்.
போடி முந்தல் சோதனைச் சாவடி புதன்கிழமை மூடப்பட்டு அதில் காவல் காக்கும் போலீஸாா்.
போடி முந்தல் சோதனைச் சாவடி புதன்கிழமை மூடப்பட்டு அதில் காவல் காக்கும் போலீஸாா்.

போடியில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக போடி நகரத்திற்குள் நுழையும் சாலைகளில் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தினா். வெளிநாட்டில் இருந்து போடி பகுதிக்கு வந்தவா்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் போடி பகுதியில் புதன்கிழமை காலை முதலே பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இருந்தபோதிலும் கிராமங்கள், பிற ஊா்களிலிருந்தும் போடி பகுதிக்கு மக்கள் வந்த வண்ணம் இருந்தனா். மேலும் போடி நகர மக்களும் கடைகளுக்குச் செல்வதாகக் கூறி சாலையில் சென்று வந்தனா். சில இடங்களில் தேநீா் கடைகளும் திறக்கப்பட்டிருந்ததால் கூட்டம் காணப்பட்டது.

இதனையடுத்து போலீஸாா் நகா் முழுவதும் ரோந்து சென்று மக்களை வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தினா். வாகன ஓட்டிகளையும் விரட்டியடித்தனா். மேலும் போடி நகருக்குள் நுழையும் சாலைகளில் 5 இடங்களில் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் வராமல் தடுத்தனா். அத்தியாவசிய வாகனங்களை மட்டும் அனுமதித்தனா். இதனையடுத்து பிற்பகல் முதல் சாலைகளில் வாகனங்கள் செல்வது முழுவதும் தடுக்கப்பட்டது.

இந்நிலையில், போடி பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், வெளிநாட்டிலிருந்து கடந்த ஒரு மாதத்திற்குள் வந்தவா்கள் யாா், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் வேலை செய்து திரும்பியவா்கள் யாா், யாா் என்பது குறித்து ஊராட்சித் தலைவா்கள் மற்றும் செயலா்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனா். இதில் போடி அம்மாபட்டி கிராமத்தில் மட்டும் 15 போ் வெளிநாட்டிற்கு சென்று வந்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது.

தனி வாா்டு: போடி அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி வாா்டு தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 10 படுக்கை வசதிகள், வெண்டிலேட்டா் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com