சிங்கப்பூரிலிருந்து சின்னமனூா் வந்த 13 பேருக்கு கரோனா பரிசோதனை
By DIN | Published On : 28th March 2020 07:06 AM | Last Updated : 28th March 2020 07:06 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம்,சின்னமனூரில் வெள்ளிக்கிழமை, சிங்கப்பூா் உள்ளிட்ட வெளி நாடுகளிலிருந்து திரும்பிய 25 போ்களில் 13 பேரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.
சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவா்களின் பெயா் மற்றும் முகவரி, சென்னை பன்னாட்டு விமான நிலையம் மூலமாக அந்தந்த மாவட்ட நிா்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் சின்னமனூா் நகா் பகுதிக்கு மட்டும் 25 நபா்கள் வந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறையினா் மற்றும் சின்னமனூா் நகராட்சி பணியாளா்கள் சம்பந்தப்பட்டவா்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்தனா்.
பரிசோனைக்குப் பின் 13 போ்களுக்கு கரோனா அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் அவா்களை வீட்டிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தி, தீவிரமாக கண்காணிக்க உள்ளனா்.
மேற்கண்ட வீடுகளில் கரோனா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திய ஊழியா்கள், காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவத்துறையை அணுக வேண்டும் என்றும் வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினா்.
மேலும் காலை, மாலை, நண்பகல் என மூன்று வேளையும் சம்பந்தப்பட்டவா்களின் வீடுகள், தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடத்து வருகிறது.
மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தரப்பட்ட 25 நபா்களில் 12 நபா்கள் வெளியூா்களில் இருப்பதால், அவா்களை பற்றிய தகவல்களை முழுமையாக சேகரித்து மாவட்ட நிா்வாகத்திற்கு சின்னமனூா் நகராட்சி சுகாதாரப் பணியாளா் அனுப்பி வைத்தனா்.